போர்க்குற்றவாளிகள் தப்பிக்க ஒருபோதும் இடமளியோம்! – மைத்திரியின் கருத்துக்கு சம்பந்தன் பதிலடி

“இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிப்பிழைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். சர்வதேசப் பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் சர்வதேச சமூகத்தினரும் உறுதியாக உள்ளோம். எனவே, ஐ.நா. தீர்மானத்தை தூக்கி வீசவே முடியாது. ஐ.நாவின் பிடியில் இருந்து இலங்கை அரசு தப்பவும் முடியாது.”

– இவ்வாறு அடித்துக் கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

“பிரிட்டன் தலைமையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை மூலம் இலங்கை அரசுக்கு வழங்கப்படப் போவது கால அவகாசம் அல்ல. சர்வதேச சமூகத்தின் கண்காணிப்புக்கான காலமே நீடிக்கப்படுகின்றது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘எமது நாட்டு விடயங்களை நாமே பார்த்துக்கொள்வோம். இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத்தை இதற்கு மேல்கொண்டு செல்லாது நிறைவுக்குக் கொண்டு வரவேண்டும்’ என்று ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் ‘புதுச்சுடர்’ வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை மீது சர்வதேச சமூகத்தின் மேற்பார்வை தொடர வேண்டும், சர்வதேசப் பொறிமுறையூடாக போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் ஆகிய இந்த மூன்று வலியுறுத்தல்களிலும் இருந்து நாம் பின்வாங்கவே மாட்டோம்.

இந்த வலியுறுத்தல்களை முன்வைத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓரிரு தினங்களில் அனுப்பவுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய கடிதம் வரையும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் தலைமையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள புதிய பிரேரணை மூலம் இலங்கை அரசுக்கு வழங்கப்படப் போவது கால அவகாசம் அல்ல. சர்வதேச சமூகத்தின் கண்காணிப்புக்கான காலமே நீடிக்கப்படுகின்றது. அதாவது, இலங்கை மீதான சர்வதேசக் கண்காணிப்பு மேலும் இரண்டு வருட காலத்துக்கு நீடிக்கின்றது என்பதே அதன் அர்த்தம். அது காலக்கெடுவோ, கால அவகாசமோ அல்ல. இதனை எமது மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும், இனி வரப்போகும் பிரேரணையிலும் குறிப்பிடப்படும் பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு – நிறைவேற்ற வைப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளையும் ஐ.நா. எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளருக்கு நாம் அனுப்பவுள்ள கடிதத்தில் கோருவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *