சர்வம் ‘குடு’ மயம்! வாழ்க்கையை தொலைந்த இளைஞனின் கண்ணீர்க் கதை…..

‘’ நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபா உழைத்தாலும் அதை அப்படியே ‘குடு’ பாவிப்பதற்கு செலவளித்துவிடுவேன். கையில் காசு சிக்காவிட்டால் வீட்டிலுள்ள பொருட்களை களவாடி விற்பனை செய்தாவது ‘குடு’ வாங்கிவிடுவேன். நாட்டிலும், வீட்டிலும் என்ன நடக்கின்றதென்றே தெரியவில்லை. ‘போதை’ நிலைதான் எனக்கு எல்லாமாக மாறிவிட்டது.”

இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துவிட்டு , நடமாடும் பிணமாக வாழும் இளைஞர் ஒருவர் வெளியிட்ட கருத்தே இது.

இலங்கையில் தற்போது ஹெரோயின், கொக்கெய்ன், கஞ்சா உட்பட மேலும் பல சட்டவிரோத போதைப்பொருட்கள் நாளாந்தம் கைப்பற்றப்பட்டுவருகின்றன. இவற்றை கடத்தும் – விற்பனையில் ஈடுபடுபவர்களும் மடக்கிபிடிக்கப்பட்டுவருகின்றனர்.

சட்டவிரோதபோதைப்பொருட்களுக்கு சமாதி கட்டுவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உறுதியாக நிற்கின்றனர் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அறிவிப்பு விடுத்துவருகின்றனர்.

பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் கூட்டாக இணைந்து தேடுதல் மற்றும் கைதுவேட்டையில் இறங்கியுள்ளதால், ‘போதை மாபியாக்கள்’ கதிகலங்கி நிற்கின்றனர். ‘முக்கிய புள்ளிகள்’ தலைமறைவாகியுள்ளதால் கொழும்பில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை குறைந்துள்ளது என கூறப்படுகின்றது.

இதனால் எங்கு சென்று ‘குடு’ வாங்குவது? என்னசெய்வது என தெரியாமல் வழியோரம் – விழிபிதுங்கி நிற்கின்றனர் போதைக்கு அடிமையானவர்கள். அப்படியான ஒருவரைத்தான் பஞ்சிகாவத்தையில் சந்திக்க கிடைத்தது.

தலைநகர் கொழும்பில் வாகன உதிரிப்பாகங்கள் விற்பனைக்கு பெயர்போன இடம்தான் பஞ்சிகாவத்தை. புதிய மற்றும் ஏற்கனவே பாவிக்கப்பட்டது என அனைத்து தரத்திலும் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன.

கொள்வனவாளர்களையும், விற்பனையாளர்களையும் இணைக்கும் புள்ளியாக சில தரகர்களே செயற்படுகின்றனர். எந்த கடையில், என்ன பொருட்கள் உள்ளன என்பது உட்பட அனைத்து விடயங்களும் அவர்களுக்கு அத்துப்படி.

இதனால், வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் உட்பட பெரும்பாலானவர்கள் தரகர்களின் உதவியையே நாடுவார்கள். இரு தரப்பிலிருந்தும் அவர்களுக்கு ‘கொமிஷன்’ வழங்கப்படும். நாளொன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் மேல் தரகுப்பணமாக உழைப்பவர்களும் இருக்கின்றனர்.

இவ்வாறு நாளொன்றுக்கு குறைந்தபட்டசம் 5 ஆயிரம் ரூபாவை தரகுப்பணமாக உழைப்பவர்தான் சுதா ( பெயர்மாற்றப்பட்டுள்ளது).

வாழ்க்கையை தொலைத்த சுதா

சுமார் 35 வயதிருக்கும். பார்ப்பதற்கு பிதாமகன் படத்தில் வரும் விக்ரம்போலவே காட்சிதருகிறார். இரண்டு கால்களிலும் புண்கள். வடியும் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு ஈக்களிடையே சண்டை. ( புகைப்படம் எடுக்கவேண்டாம் என கோரினார்.)

என் கதை இந்த சமூகத்துக்கு நல்லபாடமாக இருக்கட்டும். இனி எவரும் குடுவுக்கு அடிமையாகக்கூடாது என கோரிக்கையுடன் கதைக்க ஆரம்பித்தார் சுதா.

‘’ 12 வயதில் சிகரட். அதன்பிறகு மாவா, தற்போது குடுவில் வந்து நிற்கின்றேன். ஆரம்பத்தில் நண்பர்களுடன் இணைந்து இன்பத்துக்காகவே குடு அடித்தேன். இன்று அதுவே எனக்கு சாபக்கேடாக மாறியுள்ளது.

ஒருநாளைக்கு 10 ஆயிரம் தேடினால்கூட  அவ்வளவு தொகைக்கும் குடு அடித்துவிடுவேன். ( பயன்படுத்தும் போதைப்பொருளின் பெயரை சொல்லவில்லை)

சில நாட்களில் பணம் கிடைக்காவிட்டால், வீட்டிலுள்ள பொருட்களை விற்பனை செய்துவிடுவேன். அதனால், இப்போது என்னை வீட்டிலும் விரட்டிவிட்டார்கள். உரைப்பு சாப்பிட்டால் போதை இறங்கிவிடும். எனவே, பாண்  மற்றும் சீனியே சாப்பிட்டுவருகின்றேன்.

இதிலிருந்து என்னால் முழுமையாக மீளமுடியவில்லை. குடு அடித்தால் வேறு போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் உடலுக்குள் ஆயிரம் வலிகள்.

பொலிஸில் சிக்கியுள்ளேன். இப்போது கைதுசெய்வதில்லை. என்னை எல்லாம் திருத்தவே முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.
தாய்க்கு மகனாக, மனைவிக்கு நல்ல கணவராக நான் வாழவில்லை. திருந்துவோம் என நினைத்தாலும் இனி முடியாது. மரணம்தான் ஒரே வழி. புன்வாழ்வு பெறும் கட்டம் எல்லாம் தாண்விட்டது.

தயவுசெய்து நீங்கள் எல்லாம் இதை பழகிவிடவேண்டாம். என்நிலைமையை பார்த்தாவது திருந்துங்கள்.’’ என கூறிவிட்டு தள்ளாடிய படியே அங்கிருந்து நடையைக்கட்டினார் சுதா.

மது, மாது, சூது இம்மூன்றுமே மனித வாழ்வுக்கு சாபக்கேடானவை. எதற்கும் நாம் அடிமையாகிவிடக்கூடாது என்பதற்கு சுதாவின் வாழ்க்கை சிறந்த சான்றாகும். இன்னும் பல சுதாக்கள் எம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

இலங்கையில் நடப்பது என்ன?

இந்து சமூத்திரத்தின் முத்து என ஒரு காலகட்டத்தில் வர்ணிக்கப்பட்ட இலங்கையானது, இன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர நிலையமாக மாறியுள்ளது என சமூக ஆர்வளர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர்.

அண்மைக்காலமாக கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகளை இதற்கான சான்றாக பட்டியலிட்டுக்காட்டுகின்றனர்.

அரசியல் பலம் இல்லாமல் இதை செய்யமுடியாது. அன்று வெலே சுதா கைதானபோது பல தகவல்கள் கசிந்தன. இன்று மாகந்துர மதூஷ் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியாகிவருகின்றன.

எனவே, கடத்தல்காரர்களை கைதுசெய்யும் அதேவேளை, அவர்களை இயக்குபவர்களையும், உதவிகளை வழங்குபவர்களையும் கைதுசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *