வருடாந்தம் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பு

இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் 2025ஆம் ஆண்டாகும்போது வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விராஜ் டி சில்வா தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் 07 மாதங்களில் மாத்திரம் இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 312 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

வருடாந்தம் 02 பில்லியன் டொலர் இலக்கை அடைவதற்கு பிரதான தடையாக இருந்த சட்டவிரோத இரத்தினக்கல் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய வேலைத்திட்டம் ஒன்று ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, வெளிநாட்டுக் கொள்வனவாளர்களுக்கு இந்நாட்டில் நடைபெறும் இரத்தினக்கல் ஏல விற்பனைகளில் நேரடியாக இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான வசதிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என டி.விராஜ் டி சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட “1O1” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த விராஜ் டி சில்வா,

“இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை சட்டத்தின்படி, சுரங்கத்திற்கான அனுமதிகளை வழங்குவதில் இருந்து இரத்தினக்கல் ஏற்றுமதி வரை ஒழுங்குபடுத்தல் பணிகள் அதிகாரசபையால் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், ஏலத்தின் போது, விற்பனை, வெளிநாடுகளுக்கு அனுப்புதல் வரையிலான ஒழுங்குபடுத்தல்களை நாங்கள் மேற்கொள்கிறோம். இவை அனைத்தும் நாட்டுக்காக செய்யப்படுகின்றன. மேலும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு சந்தைப்படுத்தல் பிரபல்ய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிற்கு இயன்றளவு அந்நிய செலாவணியை கொண்டு வருவதில் கவனம் செலுத்தியுள்ளோம்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை நாடு முழுவதும் ஆறு பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இந்த அலுவலகங்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. சுரங்கத்தில் இரத்தினக்கல் கிடைத்தாலும் அவர்களின் தனிப்பட்ட விருப்புக்கேற்ப அதனை விற்பனை செய்ய முடியாது.

நாட்டின் சட்டப்படி, அது பொது ஏலத்தில் விற்கப்பட வேண்டும் மேலும், இரத்தினக்கல்லை விற்ற பிறகு கிடைக்கும் பணத்தில் 2.5% அரசாங்கத்துக்குக் கிடைக்கிறது. அண்மையில் 40 கோடி மதிப்பிலான இரத்தினக்கல் ஒன்று விற்பனையானது. இந்நாட்களில் சுரங்க செயற்பாடுகளில் முன்னேற்றம் உள்ளது.

இரத்தினக் கற்களுக்கு கிடைக்கும் தொகையும் தற்போது அதிகரித்துள்ளது. சுரங்கங்களை நடத்துவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக சுரங்கங்கள் நடத்தப்பட்டால், அவற்றின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய வேண்டியேற்படும். இரத்தினக் கல்லொன்றை சாதாரணமாக ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும், இரத்தினக்கல் கிடைத்த பின், அதை பட்டை தீட்டி இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அங்கீகாரத்துடன் ஏலம் விட வேண்டும்.

இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடுகள் குறித்து கண்டறிய தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இது தொடர்பில் ஆராயுமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து ஜூலை மாதம் வரையில் இரத்தினக்கல் ஏற்றுமதியில் 312 டொலர் மில்லியன் வருமானம் ஈட்டியுள்ளது. இருப்பினும் அதனை விடவும் அதிகமான வருமானத்தை ஈட்டிக்கொள்ளும்இயலுமை எம்மிடத்தில் உள்ளது.

ஏனைய துறைகளுடன் ஒப்பிடுகையில் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண சபை 34 சதவீதம் என்ற அதிகபடியான வளர்ச்சி வீதத்தை எட்டியுள்ளது. குறிப்பாக தேயிலை மற்றும் ஆடை உற்பத்தித் துறைகளை மிஞ்சியதாக அந்த வளர்ச்சி காணப்படுவதாக மத்திய வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறு கிடைக்கும் இரத்தினக்கல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரித்துடையது என்ற வகையில், அதற்குரிய பெறுமதி நாட்டிற்கு கிடைக்க வேண்டியது அவசியமாகும். பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான இயலுமையும் அதனால் கிட்டும்.

இரத்தினக்கல் ஏற்றுமதியினால் வருடாந்தம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டிக்கொள்ளமுடியும். இலங்கையை இரத்தினக்கல் வியாபாரத்திற்கான திறந்த சந்தையாக மாற்றியமைக்க வேண்டும். அதுபோன்ற பாரிய வேலைத்திட்டங்களை தற்போதும் நாம் முன்னெடுத்து வருகின்றோம். அதற்கமைய இவ்வருட இறுதிக்குள் இரத்தினக்கல் தொழில்துறையினால் 500 டொலர் மில்லியன் வருமானம் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதற்காக நாட்டில் மேற்படிச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள வேண்டும். தற்போது சிறிதளவானவர்களே இந்த வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இரத்தினக்கல் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான விரிவான வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொள்வனவாளர்களை தேடிக்கொள்ளல் மற்றும் புதிய சந்தைகளை தேடிக்கொள்வதே எமது நோக்கமாக உள்ளது. இரத்தினக்கல் துறை தொடர்பில் அக்கறை காட்டுவோர் இந்த பணிகளில் இணைந்துகொள்ள முடியும்.

அதேபோல் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையில் இடம்பெற்ற மோசடிகளை தவிர்ப்பதற்கான முயற்சிகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். அதிகாரியொருவர் ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் தொழில்புரியும் போது அங்கு மோசடிகள் நிகழ்வதற்காக வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. அது தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய வகையில் இடமாற்ற கொள்கையொன்றின் ஊடாக மேற்படி பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கியுள்ளோம். அதேபோல் கணக்குகளுக்கான மென்பொருள் நிறுவனமொன்றை நிறுவியுள்ளதால்மோசடிகளுக்கு இடமில்லை.

அதேபோல் இலங்கை மக்களின் தங்க ஆபரணங்களின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் எமக்கு உள்ளது. அதனால் எமது நிறுவனத்திற்கு வருகை தந்து தங்களது தங்க ஆபரணங்களின் பெறுமதியை அறிந்துகொள்ளும் இயலுமை சகலருக்கும் உள்ளது. இத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையினால் வழங்கப்படும் உறுதிப்படுத்தல் காரணமாக தங்களது தங்க ஆபரணங்களுக்கு உயரிய பெறுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.” என்று இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *