செங்கடலில் தொடரும் நெருக்கடி: கொழும்பு துறைமுகத்துக்கு பாரிய வருமானம்

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் செயற்பாட்டின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான இலங்கை துறைமுக அதிகாரசபை, 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொள்கலன் பரிமாற்றத்தில் பாரிய வளர்ச்சியை கண்டுள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், கையாளப்பட்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 441,032 ஆக இருந்தது. இது 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 652,766 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சி கடந்த ஆண்டைவிட 48 வீத அதிகரிப்பாகும்.

மேலும், இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த வருடத்தின் (2024) முதல் 03 மாதங்களில் 582,403 டிரான்ஷிப்மென்ட் கொள்கலன்களை கையாண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது 49.81 வீத வளர்ச்சியாகும்.

மொத்தத்தில் கொழும்பு துறைமுகம், SLPA, CICT, ECT, JCT மற்றும் அனைத்து முனையங்களும் இந்த ஆண்டின் முதல் 03 மாதங்களில் 1,729,314 டிரான்ஷிப்மென்ட் கொள்கலன்களைக் கையாண்டுள்ளன. கடந்த ஆண்டின் இந்தக் காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது இது 24.20 வீத வளர்ச்சியாகும்.

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் டி.பர்னார்ட் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

‘செங்கடலைச் சூழவுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எழுந்துள்ள யுத்த அபாயம் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் இயக்கத் திறன் குறுகிய கால அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கும் சில முக்கிய கப்பல் வலையமைப்புகள், போர் அபாய வலயத்தில் அமைந்துள்ள செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாயைத் தவிர்த்து, தங்கள் கொள்கலன்களை பரிமாற்றும் துறைமுகமாக கொழும்பு துறைமுகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளன.

எந்தவொரு உலகளாவிய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் திறன் கொழும்பு துறைமுகத்திற்கு இருப்பதால், இந்த நிலைமையை நிர்வகிப்பதன் மூலம் அதன் நன்மையை தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.‘‘ என்றார்.

கொள்களன் பரிமாற்றங்கள் காரணமாக கொழும்புத் துறைமுகத்துக்கு பாரிய வருமானங்கள் கிடைத்துள்ளதாகவும் கீத் டி.பர்னார்ட் கூறியுள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த நபம்பர் மாதம் 7ஆம் திகதிமுதல் நிலவிவரும் போர் காரணமாக சூயஸ் கால்வாயின் ஊடாக கப்பல்கள் பயணிப்பது 90 வீதத்ததால் குறைந்தது. இன்னமும் இங்கு அமைதியான சூழ்நிலை ஏற்படவில்லை என்பதால் கொழும்பு துறைமுகத்தை பரிமாற்றும் இடமாக சர்வதேச கப்பல் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பித்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *