சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள்! – கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பத்தையும் உதாசீனப்படுத்தவேண்டாம் என்கிறார் ரணில்

“ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு, கூட்டாட்சி (சமஷ்டி), தனி நாடு, தமிழீழம் என்று உளறுவதை விடுங்கள். சொற்களைத் தூக்கிப் பிடிக்காதீர்கள். அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் மூவின மக்களும் நல்லிணக்கத்துடன் வாழும் புதிய அரசமைப்பை நிறைவேற்றும் பணியை நாம் முன்னெடுக்கவேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக தீர்வுகாண இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை எவரும் உதாசீனப்படுத்தக்கூடாது.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

‘ஜே.ஆர்., பிரேமதாச வழியில் ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்று காலியில் நேற்றுமுன்தினம் கூறியுள்ளீர்கள். புதிய அரசமைப்புக்கான நிபுணர் குழுவின் அறிக்கையில், வழிகாட்டல் குழு சமர்பித்துள்ள அறிக்கையில் ஒற்றையாட்சி – ஒருமித்த நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இந்த அறிக்கைகளில் தனது நிலைப்பாட்டை தனியாகச் சமர்ப்பிக்கவில்லை. இந்த நிலையில் உங்களது நிலைப்பாடு என்ன?’ என்று கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர், பிரதமரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டால் இந்த நாட்டுக்கு சர்வதேச அரங்கில் நற்பெயர் கிடைக்கும்.

சர்வதேச சமூகம் எந்தவித அழுத்தங்களையும் நாட்டின் மீது பிரயோகிக்காது. இதை ராஜபக்ச அணியினர் உணரவேண்டும்.

புதிய அரசமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை மாத்திரமே நாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்.

இனித்தான் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகள் ஆரம்பமாகவுள்ளன. இதை முளையிலேயே கிள்ளும் நடவடிக்கைளில் எவரும் ஈடுபடக்கூடாது.

புதிய அரசமைப்பைக் குழப்பியடிக்கும் நடவடிக்கைகளில் சில அரசியல்வாதிகளும் சில கறுப்பு ஊடகங்களும் களமிறங்கியுள்ளன.

இந்த அசிங்கமான – மோசமான நடவடிக்கைகளை இந்தத் தரப்பினர் உடன் நிறுத்தவேண்டும்.

நாட்டில் நீண்டகாலமாகத் தொடரும் தேசிய இனப்பிரச்சினைக்குப் புதிய அரசமைப்பின் ஊடாக தீர்வுகாண இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை எவரும் உதாசீனப்படுத்தக்கூடாது” – என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *