வடக்கு – கிழக்குக்கு அதிக நிதி கோரி மங்களவைச் சந்திக்கும் கூட்டமைப்பு! – மாவை எம்.பி. தகவல்

“போரால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களில் மீள்கட்டுமானங்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. ஆகவே, அதிகளவான நிதியை ஒதுக்குமாறு அரசைக் கேட்கின்றோம். இது தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவையும் விரைவில் சந்திக்கவுள்ளோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஓய்வூதியர் தின நிகழ்வு யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஏற்பட்ட போர் காரணமாகப் பலர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர். அங்கு அவர்கள் பல்வேறு துறைகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர். அங்கு சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றவர்கள் இந்த மண்ணுக்கு வந்து சேவையாற்றுவதற்கும் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றனர். அதேநேரம் போர்க் காலத்திலும் இங்கு பல்வேறு கஷ்டங்கள் துன்பங்களுக்கு மத்தியில் சேவையாற்றியவர்கள் போற்றப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

அவ்வாறு செயற்பட்ட ஓய்வூதியர்கள் பல்வேறு கோரிக்கைகளைத் தற்போது முன்வைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்கவேண்டுமெனக் கோரியிருக்கின்றனர். இன்று வாழ்க்கைச் செலவு பல மடங்கு அதிகரித்திருப்பதால் ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவும் நிச்சயம் அதிகரிக்கப்படவேண்டும். இவை தொடர்பில் நாம் அரசுக்கும் தெரியப்படுத்துவோம்.

மேலும் போரால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசங்களுக்கு அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை. அதனால் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியாமல் உள்ளது. இவை தொடர்பில் நாம் பல தடவைகள் சுட்டிக் காட்டி வந்திருக்கின்றோம். ஆகவே, இதனை அரசு கவனத்திலெடுத்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அதிகளவிலான நிதியை ஒதுக்கவேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றோம்.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீள் கட்டுமானங்கள் மிக மிக அவசியமானவை. அத்தகைய மீள்கட்டுமானங்களுக்குத் தற்போது நிதி இல்லை. ஆகவே எமது பகுதிகளில் மீள்கட்டுமாணங்களுக்கு அரசு அதிக நிதியை ஒதுக்கவேண்டுமென்று கோரிக்கை விடுக்கும் அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *