ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்! – இதுவரை பரிந்துரையில் உள்ளார் என்கிறார் கிரியெல்ல

“ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர்தான் இதுவரைக்கும் பரிந்துரையில் உள்ளது.”

– இவ்வாறு சபை முதல்வரும் அரச தொழில் முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் கட்சியால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்று ஒரு தரப்பினரும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இன்னொரு தரப்பினரும், இந்த இரண்டு தேர்தல்களுக்கும் முன்னர் மாகாண சபைத் தேர்தலே நடைபெறும் என்று ஜனாதிபதியும் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அரசியலில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் போட்டி காரணமாகவே இந்தக் கருத்துக்கள் மாற்றி மாறி வருகின்றன. ஆனால், ஐக்கிய தேசிய முன்னணி எந்தத் தேர்தலையும் சட்டபூர்வமாக எதிர்கொள்ளத் தயாராகவுள்ளது.

அதன் பங்காளிக் கட்சிகள் ஓரணியில் ஒற்றுமையாக உள்ளன. மேற்படி மூன்று தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணியே வெற்றிவாகை சூடும் என்பது உறுதி.

நாங்கள் குறுக்கு வழியில் வந்து ஆட்சி செய்பவர்கள் அல்லர். நாட்டு மக்களின் ஆணைக்கிணங்கவே ஆட்சி செய்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *