கள்ள உறவில் ஈடுபட்டால் மரணதண்டனை- 3 ஆம் திகதி முதல் புதிய சட்டம்!

தகாத உறவில் ஈடுபட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம், புரூனே நாட்டில் 3ஆம் திகதி நடைமுறைக்கு வருகின்றது.

தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று புரூனே. இங்கு ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. அதுவும் அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியாவை காட்டிலும் இங்கு ஷரியத் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகிறது.

இந்த நாட்டில் தகாத உறவும் (கள்ள உறவு), ஓரினச்சேர்க்கையும் கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனாலும் இந்த குற்றங்கள் அங்கு பெருகி வந்த நிலையில் தண்டனையை கடுமையாக்க முடிவு எடுத்தனர்.

தண்டனை கடுமையாகிறபோதுதான் குற்றங்கள் நடப்பது முடிவுக்கு வரும் என கருதிய அந்த நாட்டின் மன்னர் இவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டு வந்தார்.

இந்த நாட்டில் மரண தண்டனையை குற்றவாளிகள் மீது கல் எறிந்து கொன்று நிறைவேற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புரூனே நாட்டில் திருட்டை ஒழிக்கவும் தண்டனையை கடுமையாக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி முதல் முறை திருடுகிற குற்றவாளிகளுக்கு வலது கையை வெட்டி விடுவார்கள். இரண்டாவது முறை அதே நபர் திருடினால் அவருக்கு இடது காலை வெட்டி விடுவார்கள்.

இப்படி கடுமையான தண்டனை விதிக்கிறபோது திருட்டை ஒழித்துக்கட்டி விடலாம் என்று அந்த நாட்டின் அரசு நம்புகிறது.

இந்த தண்டனைகள் வரும் 3-ந் திகதி (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பை அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் அலுவலகம் கடந்த டிசம்பர் மாதம் 29-ந் திகதி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இப்படி தகாத உறவு, ஓரினச்சேர்க்கை, திருட்டு ஆகிய 3 குற்றங்களுக்கும் தண்டனையை அதிகரிப்பது என கடந்த 2013-ம் ஆண்டு முடிவு எடுத்து உள்ளனர்.

ஆனாலும் வலது சாரி அமைப்புகளின் கடும் எதிர்ப்பினால், எப்படி நடைமுறைப்படுத்துவது என்று அதிகாரிகள் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டு வந்ததால் தாமதம் ஆகி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அதே நேரத்தில் புரூனே ஆராய்ச்சியாளர் ரேச்சல் சோவா ஹோவர்டு இந்த தண்டனைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் சர்வதேச அமைப்பு இந்த புதிய தண்டனைகளை அமல்படுத்துவதை புரூனே உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஆனால், புரூனே மத விவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இந்தப் பிரச்சினையில் மன்னர் தனது அறிவிப்பை 3-ந் திகதி வெளியிடுவார்” என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *