ஐ.நாவில் இலங்கை மீதான அழுத்தம் அதிகரித்தே தீரும்! – மைத்திரியே காரணம் என்கிறார் மங்கள

“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் நடப்புக் கூட்டத் தொடரில் இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் மேலும் அதிகரிக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளே அதற்குக் காரணம்.”

– இவ்வாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் இந்நாள் நிதி அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை தொடர்பான விவகாரம் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரிலும் புதிய தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பித்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் ஜெனிவாவுக்குச் செல்லவுள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை இணை அனுசரணை வழங்கி தீர்மானத்தை நிறைவேற்றியபோது வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றிய மங்கள சமரவீரவிடம் இது தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாம் நடைமுறைப்படுத்தினோம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு எதிராகச் செயற்பட்டார். தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தடுத்தார்.

அவரது செயற்பாடுகளால் இலங்கை மீது சர்வதேச சமூகத்தின் அதிருப்தி அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் இன்னமும் அதிகரிக்கும். அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *