மக்கள் ஏன் நீதி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்?

– பஸ்றி ஸீ. ஹனியா
சட்டத்துறை மாணவி
யாழ். பல்கலைக்கழகம்.


நீதி என்ற விடயம் அனைத்து இடங்களிலும் நிறைந்து கிடக்கின்றது. எங்கு பார்த்தாலும் நீதி கோருவோர் ஒரு பக்கம், நீதி வழங்குவோர் மறு பக்கம், நீதி வழங்கப்படவில்லை எனக் கோஷமிடுவோர் எல்லாப் பக்கங்களிலுமே.அனைத்துக்குமே நீதி வேண்டி நிற்கும் நமக்கு நீதி பற்றிய புரிந்துணர்வு என்பது இன்றியமையாததாகும்.நீதி என்ற கருதுகோளானது மனிதன் சிந்திக்க ஆரம்பித்தவுடனே ஆரம்பமாகிவிட்டது.

அந்தவகையில் நீதி என்பதற்கு ஒரு தீர்க்கமான வரைவிலக்கணம் கிடையாது. இருந்தபோதிலும் நீதி என்பதை அடிப்படையாகக் கொண்ட அத்தியாவசிய மதிப்புக்களின் தொகுப்பு எனலாம். இந்த மதிப்புக்கள் மரியாதை, சமத்துவம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகும்.

ஒரு முறையான அர்த்தத்தில் நீதி என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட விதிமுறைகளின் தொகுப்பாகும். அவை திறமையான உயிரினங்கள் மூலம் அவமதிக்கப்படும்போது ஆணையிடுகின்றன, அமுல்படுத்துகின்றன, தடைகளை விதிக்கின்றன, பொதுவான நன்மையின் பாதிப்பை உருவாக்கும் செயல் அல்லது செயலற்ற தன்மையை அடக்குகின்றன எனலாம்.

இருந்தபோதிலும் நீதியானது ஒரு பிரதேசத்தின் நாகரிகத்துக்கேற்ப, கலாசாரம் மற்றும் வழக்கங்களுக்கேற்ப அது மாறுபடும். மேலும் இதன் பொருளானது குறித்த நாட்டின் கால மாற்றத்துக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மாறுபடும்.

ஒரு சமூகத்துக்கு நீதியாக விளங்கும் விடயம் அடுத்த சமூகத்துக்கு நீதி அற்றதாகத் தோன்றலாம்.

உதாரணமாக மரணதண்டனை என்ற விடயம் ஒருசில சமூகத்துக்கு நீதியானதாகவும், இன்னும் பல சமூகங்களுக்கு நீதியற்ற மிலேச்சத்தனமான செயலாகவும் தோன்றுகின்றது. அனைத்து இடங்களிலும் ஒரே நீதி காணப்படுமானால் நாடுகளுக்கு நாடு ஒவ்வொரு சட்டங்கள் தேவையில்லை. உலகையே ஒரு சமநிலைக்குக் கீழ் கொண்டு வந்துவிடலாம். ஆனால், அது முடியாத காரியம். ஏனென்றால், ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு பிரதேசமும், ஒவ்வொரு சமூக ஒழுக்க நெறிகளில் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் பின்பற்றப்படும் நாகரிகங்களுக்கும் தெற்காசிய நாடுகளில் பின்பற்றப்படும் நாகரிகங்களுக்கும் இடையில் மிகப் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆகவேதான் எவ்வாறு சம நீதி வழங்க முடியும்? இதனால்தான் நீதிக்கான ஒரு பொதுவான வரைவிலக்கணத்தை வழங்க முடியாது இருக்கின்றது.

நீதியானது மதம், அறநெறி, பொருளாதாரம், சட்டம், அரசியல், பூகோள அமைப்பு , வழக்காறுகள், சூழ்நிலைகள் என்பவற்றுக்கேற்ப மாறுபடக் கூடியவை .

சட்டமானது உருவாக்கப்பட்டு அந்தச் சட்டம் பெரும்பான்மையானோர் நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் . அவ்வாறான சட்டம் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்பட வேண்டும். அதேவேளை அவ்வாறு கொடுக்கப்படும் பெரும்பான்மையானோருக்கு நன்மையை விளைவிக்கும் அந்தச் சட்டமானது சிறுபான்மையினரின் உரிமைகளிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்கும் சட்டங்களின்படி நடத்துதல் நீதி ஆகின்றது.

நீதியின் சில வகைகளை எடுத்து நோக்குவோமானால்,

* தண்டனை நீதி – குற்றம் புரிந்தவர்களுக்கு வழங்கும் நீதியாகும் .

* இழப்பீட்டு நீதி – பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நீதியாகும்.

* மறு பகிர்வு நீதி – சலுகைகள் மற்றும் சுமைகளை வழங்கும் நீதியாகும்.

* மறு சீரமைப்பு நீதி – பாதிக்கப்பட்டவரின் நல்வாழ்வைக் கவனம் செலுத்தி சேதத்தைச் சரி செய்யும் நீதியாகும்.

* பழிவாங்கும் நீதி – உடனடியாகத் தண்டனை கிடைக்கப்படாவிட்டாலும் நீண்டகாலத்துக்குப் பின்னர் அதற்கான தண்டனைகளை வழங்கும் நீதியாகும்.

மேலும் சட்ட நீதி, இயற்கை நீதி, அரசியல் நீதி, சமூக நீதி, பொருளாதார நீதி, நிர்வாக நீதி மற்றும் சமய நீதி என்று பல நீதி வகைகள் இருக்கின்றன.

நீதி என்பது புலன்களால் தொடர முடியாத பொருளாகும். அதனை உணர மட்டுமே முடியும். ஆகவேதான் அந்த நீதியானது வெறுமனே வழங்கப்பட முடியாது. நாட்டில் இருக்கும் சமூக, பொருளாதார, அரசியல், மத சட்டத்துறைகள் அனைத்துடனும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு முடிவுக்கு வந்த பின்பே நீதியைக் கொடுக்க முடியும்.

சாதாரண மக்களாக  இருந்தால் என்ன, உயர்தரத்தில் இருக்கும் மக்களாக இருந்தால் என்ன, கீழ்த்தரத்தில் இருக்கும் மக்களாக இருந்தால் என்ன, சாதி, நிறம், மத, இனப் பாகுபாடுகள் எதுவுமே இல்லாமல் அனைவருக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். இதற்காக எடுக்கப்படும் முயற்சியே நீதியின் ஒரு மிகப்பெரும் பரிமாணம் ஆகும்.

இத்தகைய முயற்சியே ஒரு சமூக நீதியை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு ஏற்படும் சமூக நீதி நாட்டில் உள்ள சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு வழிவகுக்காமல் சுபீட்சமாக  அனைவரும் வாழ்வதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தி நாட்டையும் உலகையும் சிறப்பாக வாழ்வதற்கேற்ற சூழலாக மாற்றுகின்றது.

இருந்த போதிலும் இவ்வாறு வழங்கப்படும் சம நீதியும் விமர்சனத்துக்குரியதே. மக்கள் யாவரும் சமமானவர்கள் இல்லை. அவ்வாறு சமமற்ற மக்களுக்கு சமமான நீதி வழங்குதல் என்பது பலருக்கும் இடையூறாக அமையலாம் என்று கூறப்படுகின்றது.

எது எதுவாக இருந்தபோதிலும் இலங்கை போன்ற பல கலாசார நாடுகளை எடுத்து நோக்கினால் வித்தியாச வித்தியாசமான மொழி, மத, இன, சாதி வேறுபாடுகளைக் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். இவ்வாறான மக்களுக்கு சரியான நீதி வழங்கப்படவில்லையெனின் நாட்டின் சுபீட்சம் குழம்பும் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்களை நாம் அனுபவித்தும் இருக்கின்றோம். இன்று வரைக்கும் அனுபவித்துக்கொண்டும்தான் இருக்கின்றோம்.

சட்டங்கள் நீதியானதாக இருக்க வேண்டுமென்றால் சட்டம் இயற்றுபவர்கள் நீதியானவர்களாக இருக்க வேண்டும். அதற்கு மக்கள் நீதியான சட்டம் இயற்றும் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய வேண்டும்.

மக்கள் நீதியான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய வேண்டுமானால் மக்கள் நீதி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு மக்கள் நீதியானவர்களாக நடக்க வேண்டும்.

மக்கள் என்னும் பொருளில் ஒவ்வொரு குடிமகனும் இருக்கின்றான். ஆகவேதான் நீதி என்ற விடயம் எமக்குள்ள இருந்துதான் பிறக்கின்றது. எமக்குள்ளே என்ற மனப்பாங்கில் நீதி ஏற்பட்டு எம்மைப் போல் அடுத்தவர்களும் மதிக்கப்பட வேண்டும் என்ற மனப்பாங்கு மாற்றமானது நாளை உலக நீதியை நிலைநாட்டுவதற்கு முதற்படியாக அமையும். எனவே, நீதி கோரும் நாம் அனைவரும் நம்முள் இருக்கும் நீதியைச் சரி செய்ய வேண்டும். ஆனால், உலக நீதி சரியானதாகவே இருக்கும். ஏனென்றால் சட்டங்களை உருவாக்கும் பிரதிநிதிகளும் ஒரு குடிமகன்தான். ஆகவேதான் நீதி என்பது உருவாக்கப்படுபவை அல்ல; எம்முள்ளே அடிப்படையாகவே இருக்க வேண்டியவை.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *