அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய மற்றொரு புதிய குழு!

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி இடைநடுவில் நிற்கின்றது. புதிய அரசமைப்பில் முக்கிய விடயங்களான தேர்தல்முறைமை, நிறைவேற்று அதிகாரம் என்பன தொடர்பில் கட்சிகள் இடையே பொது இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அதிகாரப் பகிர்வு தொடர்பில் மட்டும் கட்சிகள் இடையே இணக்கப்பாடு – ஒருமித்த கருத்து நிலவுவதால், அதிகாரப் பகிர்வை மட்டும் அரசமைப்பினுள் எப்படி புகுத்துவது – அதனைச் செயற்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எம்.ஏ.சுமந்திரனும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ராஜித சேனாரத்னவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் டிலான் பெரேரா, சரத் அமுனுகம ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளுக்கு அமைவாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டினார். இந்தக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், திகாம்பரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சரத் அமுனுகம, நிமல் சிறிபாலடி சில்வா, பைசர் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சியின் தேக்க நிலைமை தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஆராயப்பட்ட தேர்தல் முறைமை, நிறைவேற்று அதிகாரம், அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்களில், தேர்தல் முறைமை மற்றும் நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் அனைத்துக் கட்சிகள் இடையேயும் பொது இணக்கப்பாடு இல்லை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கப்பாடு இருப்பதால், அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 4 பேரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஒரு வார காலத்தினுள் அறிக்கையை சமர்ப்பிக்கும். அதன் பின்னர் மீண்டும் சர்வகட்சிக் குழுக் கூட்டம் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *