காணாமல்போனோரின் உறவினர்களின் ‘கதறல்’களுக்கு ‘நீதி’ கிடைக்க வேண்டும்! – சமந்தா பவர் வலியுறுத்து

“காணாமல்போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் கதறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்க்கைக்கு 30 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு கொழும்பு பண்டாநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் நல்லிணக்க செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. காணாமல்போனோர் அலுவலகத்தின் உருவாக்கம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

எனினும், காணாமல்போனோரின் உறவினர்கள் காணாமல்போன தமது சொந்தங்களின் புகைப்படங்களுடன் தற்போதும் வீதியில் காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் கதறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

இலங்கை, அமெரிக்கா, ஆகிய இரு நாடுகளுமே கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியான சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கிறது. இலங்கை கடந்த காலத்தில் பாரிய அரசியல் நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருந்தது.

அப்போது மக்கள் வீதிகளில் இறங்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்துமாறு போராடினார்கள். தனியொரு கட்சிக்காகவோ அல்லது தனியொரு நபருக்காகவோ அன்றி நாட்டினுடைய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் தமது எதிர்கால சந்ததியினருக்காவும் அந்தப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

அத்ததைய போராட்டங்கள் எந்தவொரு கட்சினாலும் ஒழுங்கு செய்யப்படாமல் சிவில் சமூக அமைப்புக்களாலும் இந்நாட்டு மக்களாலுமே ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

இவ்விடயத்தில் நீதித்துறை சுயாதீனமாகவும் நியாயமான முறையிலும் செயற்பட்டு ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியது.

எனவே, ஜனநாயக அமைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதன் ஊடாகவே இரு நாடுகளிலுமுள்ள பிரச்சினைகளைத் தீர்த்து ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *