சொல்ல வேண்டியதை சஜித்திடம் தெளிவாக எடுத்துரைத்துவிட்டேன்! – வேட்பாளரை ஐ.தே.கவின் மத்திய குழுவே தேர்ந்தெடுக்கும் என்று ரணில் திட்டவட்டம்

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எனது நிலைப்பாட்டை கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் நேரில் எடுத்துரைத்துவிட்டேன். இது தொடர்பில் சொல்ல வேண்டிய அனைத்து விடயங்களையும் தெளிவாகக் கூறிவிட்டேன். வேட்பாளரை கட்சியின் மத்திய செயற்குழுவே தேர்ந்தெடுக்கும் என்றும் அவரிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டேன்.”

– இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற சந்திப்பு எந்த முடிவும் இல்லாது நிறைவடைந்தது என அறியமுடிந்தது. அதனால் ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை முடிவுக்கு வராது நீள்கின்றது. மேற்படி சந்திப்பு குறித்து ரணில் விக்கிரமசிங்கவிடம் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகக் கட்சி. அதற்கென ஒரு யாப்பு இருக்கின்றது. எனவே, ஜனாதிபதி வேட்பாளரைத் தனிநபர்களின் விருப்புக்கிணங்கத் தெரிவுசெய்ய முடியாது. இது தொடர்பில் ஐ.தே.க. அரசின் பங்காளிக் கட்சிகள் மற்றும் வெளியில் இருந்து ஐ.தே.கவை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பு ஆகியவற்றுடன் பேச்சு நடத்த வேண்டும். அந்தக் கட்சிகளின் விருப்பங்களைக் கேட்க வேண்டும். அதன்பின்னர் ஐ.தே.கவின் மத்திய செயற்குழுவே வேட்பாளரைத் தெரிவுசெய்யும். நானோ அல்லது சஜித் பிரேமதாஸவோ அல்லது கரு ஜயசூரியவோ ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்றால் இது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவே இறுதி முடிவெடுக்க வேண்டும். இந்த அனைத்து விடயங்களையும் சஜித்திடம் நேரில் எடுத்துரைத்துவிட்டேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *