சர்வதேச சமூகம் தமிழர் பக்கம்! புதிய அரசமைப்பு நிறைவேறும்!! – யாழில் சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

“சர்வதேச சமூகம் இன்று எங்களோடு நிற்கிறது. புதியதொரு அரசமைப்பைக் கொண்டுவருவோம் என்று சொல்லி 2015ஆம் ஆண்டு சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வாக்குறுதி கொடுத்தது. எனவே, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை வெற்றிகொள்ளும் புதிய அரசமைப்பு நிறைவேறும். அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஜனநாயக வழி முறைகள் ஊடாகத் தீர்வும், தமிழ்த் தலைமையின் வகிபாகமும்’ என்னும் தலைப்பிலான அரசியல் கருத்தாடல் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜனநாயகம்

ஜனநாயகம் ஊடாக எமது மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற முடியாது என்று இங்கு சிலர் கூறியிருந்தார்கள். ஜனநாயகம் இல்லாமல் வேறு எந்த வழியில் தீர்வைப் பெற பெறமுடியும்?

நாம் எல்லோரும் ஒரு தேசத்தில் இருக்கின்றோம். ஆனால், தேசம் என்ற சொல்லுக்கு எந்த வரவிலக்கணமும் இல்லை. இங்கு மக்கள்தான் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள்.

மக்களுக்கு எந்த வகையில் தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆராய்ந்தால் அது ஜனநாயகத்தின் ஊடாக முடியும்.

ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு தேவைகள் இருந்தன. ஆயுதப் போராட்டம், அஹிம்சைப் போராட்டம் என்று பல வழிகள் ஊடாகத் தீர்வைப் பெறுவதற்கு அந்த அந்த காலங்களில் சந்தர்ப்பங்கள் தோன்றின. அதனைத்தான் இப்போதும் பயன்படுத்துவோம் என்றால் அது முடியாத காரணம்.

சந்திரிகாவின் தீர்மானத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கைவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒஸ்லோ தீர்மானத்தை கைவிட்டனர். ஆனால், அதனை நான் விமர்சிக்கவில்லை. அந்தந்த சூழலிலே அவர்கள் எடுத்த தீர்மானம் அது. அந்த சூழலுக்கு போய் நாம் தீர்வைக் காணமுடியாது.

ஆதரவு

ஆனால், இதுவரை நாம் தவறவிட்ட அந்தப் படிப்பினைகளை வைத்து இன்னுமொரு சந்தர்ப்பத்தை நாங்கள் தவறவிடுவோமா? உலகில் ஒரு நாடு கூட தவறாமல் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

போர் நடந்த காலத்தில் 33 நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்று தீர்மானித்தது. இப்போதுள்ள ஆதரவு அன்று இருக்கவில்லை.

இன்றுள்ள இந்தச் சாதகமான சூழ்நிலையை எமது மக்களுக்காக உபயோகிக்கப் போகின்றோமா என்பதுதான் இன்று இருக்கும் கேள்வி.

சர்வதேச சமூகம் இன்று எங்களோடு நிற்கிறது. புதியதொரு அரசமைப்பைக் கொண்டுவருவோம் என்று சொல்லி 2015ஆம் ஆண்டு வாக்குறுதி கொடுத்தது இலங்கை அரசு.

அதிலும் போர்க்குற்றங்கள், மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் புதிய அரசமைப்பைக் கொண்டுவருவோம் என்று இலங்கை அரசு சர்வதேச சமூகத்துக்கு கொடுத்த வாக்குறுதி அது. அதனை நிறைவேற்றுவது எப்படி என்பதே இன்றைய சூழலில் உள்ள கேள்வி.

மென்வலு

மென்வலுவிலே இருக்கும் பிரதான பாகம் உலகத்தினுடைய ஆதரவே. வன்முறையற்ற ஜனநாயக வழியிலே நாங்கள் பயணிக்கிறோம் என்று அவர்கள் நம்புகின்றபோது எமக்கான தீர்வை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

ஊடகங்கள் இன்று மிக மோசமான அரசியலை செய்து கொண்டு இருக்கிறன. உணர்ச்சிகளை எழுப்பி விட்டு செல்கின்றன.

ஜனநாயகம் இல்லாமல் வேறு வழி என்றால் ஆயுதப் போராட்டமா? உணர்ச்சிகளைத் தூண்டி விட்டு சென்று விடுவார்கள்; அதனை முகாமை செய்வது யார்?

புதிய அரசமைப்பில் என்ன விடயம் உள்ளது என்று தெரிந்துகொண்டு அதனைப் பத்திரிகைகள் எழுத வேண்டும்.

இந்த ஏக்கிய இராஜ்ஜிய என்ற பதம் ஒருமித்த நாடு என்றுதான் பொருள்படும். நான் இதனைக் கூறி கூறிச் சலித்து விட்டேன். ஆனால், அந்தப் பதம் ஒற்றை ஆட்சியைக் குறிக்கின்றது என்று ஒரு பரவலான கருத்து உள்ளது.

உண்மையைச் சொல்கின்றேன்

புதிய அரசமைப்பு தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை நிறைவேற்றும். ஒருமித்த நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என்று சொல்கின்றோம். தனிநாடு என்று காலத்துக்கு காலம் கதைகள் வரும்.

ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு – இது தான் நாம் கேட்பது. அதை விட்டு தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. நான் சொல்லுவதற்கு வெளியே போகும் போது கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான் உண்மை நிலைப்பாட்டைச் சொல்ல வேண்டும்.

நாம் உண்மை பேச வேண்டும். சிங்கள மக்கள் மனதை வெல்ல வேண்டும். எங்களுக்கு உரியதைத்தான் நாம் கேட்கின்றோம். நாடு பிளவுபடாது. மீண்டும் ஒரு வன்முறை ஏற்படாது என்று அவர்கள் தெரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் நடந்துகொள்ள வேண்டும். நாடு பிளவுபடுவதை அவர்கள் விரும்பவில்லை.

சாத்திரம் சொல்ல முடியாது

அரசியலில் எதுவும் நடக்கலாம். இதுதான் நடக்கும் என்று சாத்திரம் சொல்வதை போன்று சொல்ல முடியாது. புதிய அரசமைப்பு வாராது என்று சொன்னார்கள். ஆனால், அதன் ஆரம்பம் நேற்றுமுன்தினம் நடந்து விட்டது. புதிய அரசமைப்பு வந்தால் தமிழ் மக்களுக்கும் தீர்வு கிடைக்கும். அரசமைப்பு வரலாம். அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக உண்டு.

நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் பலம் எம்மிடம் உள்ளது. அதனை நாம் இருக்கு என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளக் கூடாது.

நாட்டில் இன்னமும் முழுமையான ஆட்சி அமைக்கப்படவில்லை. நேற்றும் கூட பிரதி அமைச்சர்கள் சிலர் பதவியேற்றார்கள். கூட்டு அரசாக மாறும் நிலைப்பாடு அங்கு உள்ளது.

புதிய அரசமைப்பு நிறைவேற நாம் முயற்சிக்க முடியும். படிப்படியாகத்தான் முன்னேற முடியும்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் வைத்தால் குடும்பி, எடுத்தால் மொட்டை என்ற நிலை உள்ளது. சர்வதேச நாடுகள் அனைத்தும் ஆதரவு தந்துள்ள நிலையில் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி நல்ல தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மென்வலு கடைபிடிக்க வேண்டும். ஆயுதம் ஏந்தும் சூழல் வேண்டாம். எங்களை நாம் பலப்படுத்த வேண்டும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *