கட்டுப்பாட்டுக்குள் வந்தது நீர்கொழும்பு இன மோதல்! – பொலிஸார் கூறுகின்றனர்

நீர்கொழும்பில் நேற்று வெடித்த இரு இனங்களுக்கிடையிலான வன்முறை தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று காலை 7 மணிக்குப் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு பேணப்படுவதைப் பாதுகாப்புத் தரப்பினர் உறுதிசெய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலே இன வன்முறையாக மாறியுள்ளது எனவும், தனிப்பட்ட பிரச்சினை ஒன்றே பாரிய வன்முறையாக மாறக் காரணமாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

நடந்தது என்ன?

நேற்று மாலை நீர்கொழும்பு – கொச்சிக்கடைப் பகுதியிலுள்ள கடலில் குளிக்கச் சென்ற பலகத்துறையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் 4 பேர் மீது, அந்தப் பகுதியிலுள்ள சிங்கள இளைஞர்கள் குழு ஒன்று வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து 4 முஸ்லிம் இளைஞர்கள் மீதும் சிங்கள இளைஞர் குழு தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன், குறித்த முஸ்லிம் இளைஞர்கள் வந்திருந்த ஓட்டோவையும் சிங்கள இளைஞர் குழு கடுமையாகத் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. குறித்த பகுதியில் முப்படையினரும் களமிறக்கப்பட்டனர்.

இந்தநிலையில், பலகத்துறைப் பகுதியில் ஒன்றுகூடிய முஸ்லிம் மக்கள், முஸ்லிம் இளைஞர்களைத் தாக்கிய குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்துப் பெரும் எண்ணிக்கையிலான சிங்களவர்கள் தடிகள், பொல்லுகள், வாள்கள் மற்றும் கத்திகளுடன் பலகத்துறைப் பகுதிக்கு வந்து அந்தப் பகுதியில் நின்ற வாகனங்களை அடித்து நொறுக்கித் தீவைத்துக் கொளுத்தினர். அத்துடன், சில வர்த்தக நிலையங்களையும், வீடுகளையும் தாக்கிச் சொத்துக்களை நாசம் செய்தனர்.

நிலைமை கட்டுமீறிப் போவதையடுத்து நீர்கொழும்புப் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரப் படையினரும், முப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டு, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு கலவரக்காரர்கள் அகற்றப்பட்டனர். எனினும், பாதுகாப்புத் தரப்பினரின் கட்டளைக்கும் கீழ்ப்படிய மறுத்து, அவர்களின் முன்பாகவே சிலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

பலகத்துறைப் பகுதி முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகுதி. கொச்சிக்கடை உட்பட அயல் கிராமங்களைச் சேர்ந்த சிங்களவர்களே பலகத்துறையில் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த பலகத்துறை முஸ்லிம் மக்கள் நேற்றிரவு அந்தப் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தஞ்சமடைந்திருந்தனர்.

நீர்கொழும்பில் நேற்றிரவு 8 மணியிலிருந்து இன்று காலை 7 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையிலும் தமது வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது வன்முறையாளர்கள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர் என்று முஸ்லிம் மக்கள் கவலை தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *