பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மைத்திரி வியூகம் – ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்களுக்கு தீர்வாக இறக்குமதியை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் குறித்து கண்டறிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பொருளாதார சபை ஒன்று கூடியபோதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்நோக்குவதற்காக இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக மட்டுப்படுத்தி உள்நாட்டிலேயே அவற்றின் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய பொருளாதார சபையில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டது.
தற்போது இலங்கையில் இறக்குமதி செய்யும் பொருட்களில் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத பொருட்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள எல்லைகளை இற்றைப்படுத்தி, சுற்றாடல் ரீதியிலும் தேசிய கைத்தொழிலுக்கும் தாக்கம் செலுத்தும் பொலித்தீன் இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் செலுத்தப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் அல்லாத பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலமும் இறக்குமதிப் பொருட்களுக்கு உரியவாறு சுங்க வரியை அறவிடுவதன் ஊடாகவும் நாட்டின் விற்பனை மீதியின் பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும் என ஜனாதிபதி தேசிய பொருளாதார சபையில் தெரிவித்தார்.
உள்நாட்டு வர்த்தகர்களும் உற்பத்தியாளர்களும் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இன்று தேசிய பொருளாதார சபை கவனம் செலுத்தியது. சீனி இறக்குமதியாளர்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போதைய கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை வழங்குவதால் அதிகளவு நட்டம் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக் காட்டப்பட்டது.
அமைச்சர்கள் மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, கலாநிதி சரத் அமுனுகம, துமிந்த திசாநாயக்க, மஹிந்த அமரவீர, மஹிந்த சமரசிங்ஹ, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும்
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, தேசிய பொருளாதார சபையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் லலித் சமரகோன், நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்குபற்றியதுடன்இ உள்நாட்டு கைத்தொழிலாளர்களும் வர்த்தகர்களும் இம்முறை தேசிய பொருளாதார சபை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.