‘பட்ஜட்’மீது இறுதி வாக்கெடுப்பு – மதில்மேல் பூனையாக சு.க.! மஹிந்தவுடனான சந்திப்பிலும் மழுப்பல்!

வரவுசெலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது என்பது  குறித்து முடிவெடுக்க முடியாமல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தடுமாறுகின்றது. இன்றைய சந்திப்பிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில் –  இறுதி முடிவுக்காக அக்கட்சி நாளை ( 05) மீண்டும் கூடவுள்ளது.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான ‘பட்ஜட்’மீது நாளை (05) நாடாளுமன்றத்தில்  இறுதி வாக்கெடுப்பு ( மூன்றாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு) நடைபெறவுள்ளது. இதன்போது எதிர்த்து வாக்களிக்குமாறு சுதந்திரக்கட்சிக்கு மஹிந்த அணி அறைகூவல் விடுத்துள்ளது.

எனினும், ‘பட்ஜட்’டின்  இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது அதில் பங்கேற்காமல் நடுநிலை வகித்த சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள், இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து குழம்பிபோயுள்ளனர்.

குறிப்பாக மஹிந்த அணியுடன் இணைந்து எதிராக வாக்களித்தால் மட்டுமே எதிர்காலத்தில் புதிய அரசியல் கூட்டணி சாத்தியமாகும் என ஒரு தரப்பும், ‘பட்ஜட்’டை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மையை ஐ.தே.க. கொண்டிருப்பதால் அதில் பங்கேற்காமல் இருப்பதே சிறந்த அரசியல் முடிவாக அமையும் என மற்றுமொரு தரப்பும் வலியுறுத்தி வருகின்றன.

இதனால் எவ்வாறு வாக்களிப்பது என்பது  குறித்து சுதந்திரக்கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (03) இரவு நடைபெற்ற சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவரான மஹிந்தவை சந்தித்து பேச்சு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமையவே இன்றைய தினம் மேற்படி சந்திப்பு நடைபெற்றது. இதன்போது ‘பட்ஜட்’ மீதான இறுதி வாக்கெடுப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சுப் பதவிகளை வகிப்பதால், பட்ஜட்டை எதிர்க்கமுடியாதுள்ளது என சு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாம்வாசிப்புமீதான வாக்கெடுப்பின்போது எடுத்த முடிவையே சுதந்திரக்கட்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.எனினும், கூட்டணி அமைக்கும் முயற்சி பாதிக்கப்படக்கூடாது என்பதாலேயே மஹிந்தவுடன் சந்திப்பு நடத்தப்பட்டதாக சு.க. வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாக வாக்களிக்கும். ஜே.வி.பி. எதிராக  வாக்களிக்கும் என இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *