சாய்ந்தமருதில் பலியானவர்களை அடையாளம்காண மரபணுப் பரிசோதனை!

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிச்சம்பவம் மற்றும் பாதுகாப்புப் பிரிவினுடனான பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்காக மரபணுப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 15 பேரின் நீதிவான் விசாரணைகள் நேற்று இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 6 ஆண்களும் 3 பெண்களும் 6 சிறுவர்களும் அடங்குகின்றனர்.

மேலும், கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கிழக்கு மாகாணத்தில் 4 வீடுகளில் குறித்த பயங்கரவாத குழுவினர் பாதுகாப்பாக தங்கியிருந்தமை கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளிலேயே இவர்கள் தங்கியிருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாய்ந்தமருதிலுள்ள குறித்த வீட்டை சோதனையிட்டபோது, அங்கிருந்து மேலும் ஜெலட்னைட் குச்சிகள், டெட்டனேட்டர்கள், 10 இலட்சத்துக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டதாகவும் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *