வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பும் முழு ஆதரவு! – முஸ்லிம் கட்சிகளும் ஒத்துழைப்பு; மலையக அமைப்புகளும் நேசக்கரம்

வடக்கு மாகாண ரீதியாக நாளைமறுதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.

அதேவேளை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி என்பனவும் வடக்கில் பூரண ஹர்த்தால் போராட்டம் வெற்றிபெறவேண்டும் என்று தெரிவித்துள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் தெரிவித்ததாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்துக்கு அன்று தொடக்கம் ஆதரவு வழங்கி வருகின்றது. அவர்களின் கோரிக்கைகள், நீதியானவை – நியாயமானவை. அந்தவகையில் வடக்கில் அவர்களால் முன்னெடுக்கப்படும் பூரண போராட்டத்துக்கு சகல தரப்புக்களும் ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” – என்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் தெரிவித்ததாவது:-

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீண்டகாலம் போராடி வருகின்றார்கள். அவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும். எந்தெந்த அரசுகளின் காலப் பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டார்கள், யாரால் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்ற உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான தமிழ், முஸ்லிம் சகோதரர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்படவேண்டும். சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக வடக்கில் முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” – என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி தெரிவித்ததாவது:-

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதிக்காகப் போராடுகின்றார்கள். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அவர்கள் நீதி கோரி வடக்கில் முன்னெடுக்கும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றோம்” – என்றார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்கரா தெரிவித்ததாவது:-

“காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீர் கதறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு பதில் கூறியே ஆகவேண்டும். மறைக்கப்பட்ட உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவர்களின் வடக்கு மாகாணக் ஹர்த்தால் போராட்டத்துக்கு நாம் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குகின்றோம்” – என்றார்.

இதேவேளை, வடக்கு ஹர்த்தால் போராட்டத்துக்கு மலையக இளம் ஊடகவியலாளர் ஒன்றியம், மலையக சமூக ஆய்வு மையம், மலையக உரிமைக்குரல், தமிழ் இளம் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியனவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *