காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கட்சிகள், அமைப்புக்களின் ஆதரவுடன் வடக்கில் நாளைமறுதினம் ‘ஹர்த்தால்!’ – கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

வடக்கு மாகாணம் முழுவதும் நாளைமறுதினம் திங்கட்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் ஏற்பாட்டில் பூரண ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனால் தாயக தேசம் முற்றாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்புக்களும் தங்களது முழுமையான – தார்மீக ஆதரவை வழங்கியுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வை இலக்கு வைத்தும், நாளைமறுதினம் திங்கட் கிழமை வடக்கு மாகாண தழுவிய பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளனர். அன்றைய தினம் கிளிநொச்சி நகரில் காலை மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள், ஒன்றியங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்புக்களும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

இந்தப் போராட்டத்துக்கு பல தரப்புக்களும் முழுமையாக ஆதரவை வழங்கியுள்ளதால் அன்றைய தினம் வடக்கு மாகாணத்தின் இயல்பு நிலை முழுமையாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

போக்குவரத்துச் சேவைகள், வர்த்தக சேவைகள் உள்ளிட்ட எல்லாம் முடங்கும். இதேவேளை, அன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலியை அறிந்து – உணர்ந்து சகல தரப்புக்களும் நடந்து கொள்ளும் எதிர்பார்க்கப்படுவதால், அன்றைய தினம் வடக்கு மாகாணம் முற்றாக முடங்கக்கூடும்.

இதேவேளை, இது தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்றிரவு விடுத்த ஊடக அறிக்கையில்,

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் திங்களன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நாளைமறுதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கும், பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் முழுமையான ஆதரவு நல்குவதோடு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வேண்டியும் நிற்கின்றது.

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுள் ஒன்றாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் காணப்படுகின்றது. உள்ளக விசாரணைப் பொறிமுறையையும் உள்ளக கலப்பு விசாரணைப் பொறிமுறையையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் தொடர்ந்தும் ஜெனிவா மனித உரிமைகள் சபையால் மேற்படி நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

பொறுப்புக்கூறும் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தொடர்ந்தும் தவறுவதனால் அந்தக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையின் கீழ் அதனை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எழுவதை ஐ.நா. மனித உரிமைகள் சபை கவனத்தில்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கான நியாயமான தீர்வை சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாகவே சாத்தியமாக்க முடியும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபை ஊடாக இலங்கை விவகாரம் கையாளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

இதேபோன்று பல தரப்புக்களும் நாளைமறுதினம் திங்கட்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *