குழந்தைகளுக்கு புதுவித கொரோனா வைரஸ் தொற்று?

பாரிஸ் பிராந்தியத்தில் 8 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 15 சிறுவர்கள் இருதய செயலிழப்புக்கு உள்ளாகியிருப்பது மருத்துவ வட்டாரங்களை உஷார்ப் படுத்தியுள்ளது. இவர்களில் பலர் கொரோ னா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களில் மூன்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களில் வழமைக்கு மாறான இந்த அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளன. இதயத்தின் தசை திசுக்களில் உருவாகும் வீக்கம் சிறுவர்களை இதயம் செயலிழக்கும் நிலைக்கு இட்டுச் செல்வது கண்டறியப் பட்டுள்ளது.எனினும் உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

இதனை அடுத்து குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் சுகாதார அதிகாரிகளை உஷார் படுத்தியுள்ளனர்.மருத்துவர்களின் இந்த எச்சரிக்கையை தீவிர கவனத்தில் எடுத்துள்ளதாக பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவர் வேரன்( Olivier Véran) கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக ‘கவசாக்கி’ (Kawasaki disease) என அறியப்படும் குழந்தைகள் நோயின் குறிகளை ஒத்துள்ள இந்த மர்ம நோயின் குணாம்சங்கள் கொரோனா வைரஸின் வெளிப்பாடா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கவசாக்கி நோய் என்பது உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்களில் வீக்கத்தை (வீக்கம் மற்றும் சிவத்தல்) ஏற்படுத்தும் ஒரு நோயாகும். இது மூன்று கட்டங்களாக நடக்கிறது, நீடித்த காய்ச்சல் பொதுவாக முதல் அறிகுறியாகும். இந்த நிலை பெரும்பாலும் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளைப் பாதிக்கிறது.

சமீப நாட்களில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் இந்த நோயின் அறிகுறிகள் குழந்தைகளில் காணப்பட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

உடல் வீக்க அறுகுறிகளுடன் சில சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் Hancock வெளியிட் டிருக்கிறார். அங்கு 12 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரோனா வைரஸுடன் தொடர்புடைய ஒரு புதிய தொற்று நோயா என்பது கண்டறியப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *