கூட்டு ஒப்பந்தம் பெரும் அநீதி! மௌனம் கலைந்தார் இராமநாதன்

” கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.  குறித்த ஒப்பந்தத்தை முழுமையாக பகுத்தறியாமலேயே இரண்டு தொழிற்சங்கங்களும் அவசர , அவசரமாக கையொப்பமிட்டுள்ளன.”

இவ்வாறு பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் எஸ். இராமநாதன் சுட்டிக்காட்டினார்.

கூட்டு ஒப்பந்தத்தில் ஏன் கைச்சாத்திடவில்லை என்பது தொடர்பில் மாவட்ட தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டம், மாத்தளை, லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் அலுவலகத்தில் இன்று ( 03) மாலை நடைபெற்றது.

குறித்த சந்திப்பின்போது வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில் ‘புதுச்சுடர்’ இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு,

” கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்தில் வரவுக்கான கொடுப்பனவு 60 ரூபாவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு 140 ரூபாவும் என மொத்தம் 200 ரூபா வெட்டிகுறைக்கப்பட்டுள்ளது.

85 சதவீதமான பெண்தொழிலாளர்கள் மேற்படி வருமானத்தை கடந்தகாலங்களில் பெற்றுவந்தனர். முதலாளிமார் சம்மேளனமும் இது தொடர்பில் புள்ளிவிபரத்தை வெளியிட்டது.

எனவே, இவ்விரண்டு கொடுப்பனவுகளும் நீக்கப்பட்டுள்ளமை 85 சதவீதமான தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

புதிய ஒப்பந்தமானது 2019 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதியே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே இரண்டு ஆண்டுகள் கணிப்பிடப்பட வேண்டும் என கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதம்தான் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும். அதாவது, புதிய சரத்தின் பிரகாரம் அடுத்த ஒப்பந்தம் 27 மாதங்களுக்கு பின்னரே கைச்சாத்திடப்படவேண்டும்.

அதேவேளை, நிலுவைச் சம்பளம் தொடர்பில் கூட்டு ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. கூட்டு ஒப்பந்தத்துக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் நிலுவைச் சம்பளம் என குறிப்பிடப்படாமல், (ex gratia payment ) புதியதொரு சொற்பதம் இணைக்கப்பட்டுள்ளது.

வர்த்தானியில் பிரசுரிக்கப்பட்ட பின்னர் கூட்டுஒப்பந்தமே சட்டபூர்வ ஆவணமாக கருதப்படும். எனவே, அதில் தெளிவாக குறிப்பிடப்படாமை தவறாகும்.நிலுவைச்சம்பளம் வழங்கப்படாவிட்டால்கூட , தோடக்கம்பனிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாமல்போகும்.

திங்கட்கிழமை ( 28 ஆம்திகதி) 10 தொழிற்சங்கங்கள்கூடி கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஆராயும்போது, கொழும்பில் அவசர அவசரமாக கையொப்பமிட்டுள்ளனர்.  இவ்வாறான குறைபாடுகள் காரணமாகவே நாம் கையொப்பமிடவில்லை.

இரண்டு தொழிற்சங்க பிரதிநிதிகளும், சற்று சிந்தித்திருந்தால், உத்தேச கூட்டு ஒப்பந்தத்தை ஆராய்ந்திருந்தால் வெற்றி இலக்கை நோக்கி நகரக்கூடியதாக இருந்திருக்கும்.

எதுஎப்படியோ எதிர்வரும் 05 ஆம் திகதிக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்கப்படும்.” என்றார் இராமநாதன்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *