மைத்திரிக்கு எதிரான அரசியல்போரை கைவிடுகிறது ஐ.தே.க.! கருவின் இல்லத்தில் ரணில் – மைத்திரி மனம்விட்டு பேச்சு!!

சபாநாயகர் கருஜயசூரியவின் வீட்டில் நடைபெற்ற முக்கியத்துவமிக்க சந்திப்பின் பின்னரே – ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி காட்டியுள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சி தரப்பால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பட்டியலிட்டுக்காட்டியுள்ள மைத்திரிபால சிறிசேன, இனியும் அத்தகையை தவறுகள் இடம்பெறக்கூடாது எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சபாநாயகரின் இல்லத்தில் இரகசிய கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, கருஜயசூரிய ஆகிய மூவர் மாத்திரமே இதில் பங்கேற்றுள்ளனர்.சுமார் ஒருமணிநேரம்வரை குறித்த சந்திப்பு நீடித்தது.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கமாட்டேன் என திட்டவட்டமாக அறிவித்துவந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வமத மற்றும் மேல்மட்டங்களிலிருந்து வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரமே தனது முடிவை மாற்றினார் எனக் கூறப்படுகின்றது.

இருதரப்பும் மேற்படி சந்திப்பில் மனம்விட்டு பேசிய பின்னர், பிரச்சினையை சுமூகமாக தீர்க்க முடிவெடுக்கப்பட்டது. இச்சந்திப்பின்பின்னரே மஹிந்த ராஜபக்சவையும், ஜனாதிபதி சந்தித்தார். இந்தபின்புலத்திலேயே பதவி துறக்கும் அறிவிப்பை மஹிந்த நேற்று விடுத்தார்.

அதேவேளை, ஜனாதிபதியை தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவேண்டாம் என ஐ.தே.க. எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளால் எழுதப்பட்டுள்ள ‘ஜனாதிபதி தாத்தா’ ( ஜனாதிபதி தந்தை) எனும் நூலை அடிப்படையாக வைத்து ஜனாதிபதிக்கு எதிராக ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் சரமாரியக சொற்கணைகளைத் தொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *