என்னைக் கொல்ல ‘றோ’ சதித்திட்டம்! – மைத்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளது என மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவரை ஆதாரம் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தப் படுகொலைச் சதிக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவே இருந்தது என்று, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்தார் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அமைச்சர் ஒருவர், ECONOMY NEXT ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த சதித் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணையையிட்டு தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், விசாரணைகள் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சரைப் பார்த்து ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அசாதாரணமான உறுதியுடன் இருந்தார் என்றும், தனது அரசு மீது ஜனாதிபதி கூறிய குற்றச்சாட்டுகளையிட்டு அவர் அதிருப்தியுடன் காணப்பட்டார் என்றும் அமைச்சரவை வட்டாரம் தெரிவித்தது.

இந்தியப் புலனாய்வுப் பிரிவு மீது குற்றம்சாட்டிய மைத்திரி, மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. என்று தெரிவித்த அமைச்சரவை வட்டாரம், மைத்திரியின் இந்தக் குற்றச்சாட்டினால் அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

அவர் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதையும் வழங்காததால், அதன் மீது அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, படுகொலைச் சதி தொடர்பான விபரங்களை வெளியிட நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும், கடைசி நேரத்தில் அது நிறுத்தப்பட்டது. அந்த செய்தியாளர் சந்திப்பை ஜனாதிபதி மைத்திரியின் முன்னாள் இணைப்பு அதிகாரியும் தற்போதைய மூத்த ஆலோசகருமான சிறிலால் லக்திலக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘றோ’ மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *