‘உயிர்த்த ஞாயிறு’ தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு! – உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி என்கிறார் ராஜித

“மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும். ஏனெனில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கடைசி வழியாக சஹ்ரான் குழுவினரை இவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள். அதேவேளை, உண்மைகள் வெளியில் வந்து இவர்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைக் கலைக்குமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொதித்தெழுந்தார்.”

– இவ்வாறு தெரிவித்தார் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.

அவர் மேலும் கூறுகையில்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் இருந்த நேரடித் தொடர்பை நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் போட்டுடைத்துள்ளார் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் ஸாலி.

கோட்டாபயவின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கிய புலனாய்வுத்துறையினரும் சஹ்ரானுடன் நெருக்கமாக இருந்துள்ளனர்.

ராஜபக்ச ஆட்சியில் இந்த உண்மைகளை வெளியில் அம்பலப்படுத்தக்கூடாது என்பதற்காகக் கோடிக்கணக்கான பணம் பேரம் பேசப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் தெரியும்.

மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனி போட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் மஹிந்த, கோட்டாபய ஆகியோருக்கும் நேரடித் தொடர்பு இருக்கும்.

ஏனெனில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கடைசி வழியாக சஹ்ரான் குழுவினரை இவர்கள் பயன்படுத்தியிருப்பார்கள்.

அதுதான் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் தெரிவுக்குழுவைப் பகிஷ்கரித்துள்ளனர்.

உண்மைகள் வெளியில் வந்து இவர்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவுக்குழுவைக் கலைக்குமாறு அமைச்சரவைக் கூட்டத்தில் கொதித்தெழுந்தார்.

அதேவேளை, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் தானும் இந்தத் தாக்குதல் சம்பவங்களுடன் சிக்குவேன் என்ற மனப்பயத்தில் ஜனாதிபதி இருக்கின்றார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சையும் பாதுகாப்பு அமைச்சையும் வலுக்கட்டாயமாக தன் வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி இந்தத் தாக்குதல்களுக்கான பொறுப்பை ஏதோவொரு வழியில் ஏற்றே ஆக வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *