ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கிடைக்காததாலேயே ஆளுநராக கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்!
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஓய்வு பெற்ற இராணுவீரர் ஒருவர் கிடைக்காததாலேயே மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை நியமித்திருக்கின்றார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
புத்தளம் பிரதேசத்தில் கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,
அமைச்சுப் பதவி வகிப்பவர்களுக்கு தங்கள் அமைச்சுகளில் தொடர்ந்து இருக்க முடியாத நிலையும் அரசின் கொள்கை காரணமாக அரச அதிகாரிகளுக்கு நிறுவனங்களில் சுதந்திரமாகப் பணி புரிய முடியாத நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.
அதனால்தான் அரச அதிகாரிகள் பதவிகளை இராஜிநாமா செய்கின்றனர். கொவிட் கட்டுப்படுத்தும் செயலணியிலிருந்து இதுவரை பல வைத்தியர்கள் இராஜிநாமா செய்துள்ளனர்.
நிறுவனங்களின் பிரதானிகளாக இருந்து அரச அதிகாரிகள் இராஜிநாமா செய்து செல்லும்போது அந்த இடங்களுக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களே நியமிக்கப்படுகின்றார்கள். மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் லக்ஷ்மன் கடந்த இரண்டு வருடங்களுக்காக நியமிக்கப் பட்டிருந்தார் . தொடர்ந்து பணி புரிய முடியாமல் 10 மாதங்களில் ஓய்வு பெற்றுச் சென்றார். மத்திய வங்கிக்கு ஆளுநராக நியமிக்க ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் கிடைக்காததாலேயே அதன் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார்.
இலங்கை மத்திய வங்கி எப்போதும் சுயாதீன நிறுவனமாகவே இயங்கி வந்திருக்கின்றது. வரலாற்றில் ஒருபோதும் அரசியல்வாதி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டதில்லை.
தற்போது முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சராக இருந்த அஜித் நிவாட் கப்ரால் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். இதன் மூலம் அரசு மத்திய வங்கியை அரசியல் நிறுவனமாக மாற்றி இருக்கின்றது. இதனால் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இலங்கை மத்திய வங்கி தொடர்பில் நம்பிக்கை இல்லாமல் போயிருக்கின்றது.
மேலும் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக இருந்த காலத்தில் நாட்டின் கையிருப்பு தொகையில் 4,5 பில்லியன் அளவில் அகற்றி இருப்பது, எமது அரசில் மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கி தடயவியல் கணக்காய் வின் மூலம் தெரியவந்தது.
அதன் காரணமாக பொருட்களின் விலை உயர்வு, பொருளாதார வீழ்ச்சி, வாழ்க்கைச் செலவு அதிகரித்திருக்கின்றது. இது தொடர்பான அறிக்கை 2019 நவம்பர் மாதமே வெளிவந்தது. ஆனால் அறிக்கை தொடர்பில் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.