லொஹான் ரத்வத்தவின் பதவி துறப்பு கண்துடைப்பு நாடகம் பொன்சேகா சீற்றம்!

லொஹான் ரத்வத்தே இராஜங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்தமையானது கண்துடைப்பு நாடகமாகும். எனவே, அடாவடியில் ஈடுபட்டுள்ள அவருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு எடுக்கப்படாவிட்டால் எமது ஆட்சியின்போதாவது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா எம்.பி. தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் கடும் விரக்தியுடனேயே இருக்கின்றனர். பல துன்பங்களை எதிர்கொள்கின்றனர். இவ்வாறான நபர்களை முழந்தாளிட வைத்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். இது சண்டித்தனம் அல்ல. மிகவும் கீழ்த்தரமான செயற்பாடாகும். போர் காலத்தில் உயிருக்கு அஞ்சி ஒளிந்தவர்கள் எல்லாம் இன்று குடித்துவிட்டு சண்டியர்களாகின்றனர்.

இவ்வாறு கீழ்த்தரமாக செயற்படும் நபர்கள் இனி சிறைக்குள் வந்தால் அவர்களை கைதிகள் இணைந்து தாக்க வேண்டும். கைதிகளின் பக்கம் மக்கள் நிற்பார்கள். இப்படியான செயலில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது,

லொஹான் ரத்வத்தே இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்துவிட்டார் எனக் கூறப்படுகின்றது. சிறைச்சாலை சம்பந்தமான அமைச்சு பதவியை மட்டுமே துறந்துள்ளார். ஏனைய இராஜாங்க அமைச்சு பதவிகள் சில அவர் வசம் உள்ளன. முழு சிறப்புரிமையையும் அனுபவிப்பார். எனவே, இது கண்துடைப்பு நாடகமாகும். தற்காலிக பதவி விலகல் மட்டுமே எதிர்காலத்தில் இதைவிடவும் சிறந்த பதவி வழங்கப்படக்கூடும்.

எனவே, அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு எவ்வாறான நடவடிக்கை எடுக்கும் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம்.

இந்த ஆட்சியின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எமது ஆட்சியின்கீழ் தண்டனை நிச்சயம். லொஹான் ரத்வத்தேயின் செயற்பாடு தனி நபரின் மோசமான செயலாகும். எனவே, இதனை இனவாதமாக்க வேண்டியதில்லை. தமிழர்களுக்கு எதிரான செயற்பாடு என காண்பிக்க வேண்டியதில்லை என தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *