அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருக்கப்போகிறது

அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக ஆசிய நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாக இருக்கப்போகிறது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

1930களில் உலகெங்கும் ஏற்பட்ட பொருளாதார ‘பெருமந்தத்துக்கு’ (Great Depression) பின் ஆசிய பொருளாதாரத்தில் ஏற்படும் மிகப்பெரிய சரிவு இது என்று அந்த அமைப்பு எச்சரித்த பின்னர் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆசியாவின் சேவைத் துறை மீண்டெழ கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்கிறது சர்வதேச நாணய நிதியம்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல நாடுகளிலும் அமலாகியுள்ள ஊரடங்கால் விமானப் போக்குவரத்து, வர்த்தகம், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தின் இயக்குநர் சாங்யாங் ரீ, “இவற்றை சரிசெய்ய நாடுகளின் அரசுகள் அதீதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.

பயணத் தடைகள், சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களை இலக்கு வைத்து அரசின் கொள்கை வகுப்பாளர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

2008-09இல் உண்டான சர்வதேச பொருளாதார நெருக்கடி (4.7% வளர்ச்சி விகிதம்), 1997-98இல் உண்டான ஆசிய பொருளாதார நெருக்கடி (1.3% வளர்ச்சி விகிதம்) ஆகியவற்றின்போது இருந்த வளர்ச்சி விகிதத்தைவிடவும் இப்போது வளர்ச்சி விகிதம் குறையும் என்கிறது சர்வதேச நாணய நிதியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *