திலீபன் நினைவேந்தலைத் தடுப்பது மக்களின் அபிலாஷைகளை முடக்கும் சதி! – யாழ். மாநகர மேயர் குற்றச்சாட்டு

“தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை அரச நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்தித் தடுக்க முயல்வது எமது மக்களின் அபிலாஷைகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற சதி முயற்சிகளாகவே எண்ணத் தோன்றுகின்றது.”

– இவ்வாறு யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

“1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி எமது மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் – அஹிம்சா ரீதியான போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் தியாக திலீபனின் இறுதி நாள் நிகழ்வுகளை யாழ். மாநகர சபை பொறுப்பேற்று நடத்தும் என்று யாழ். மாநகர சபை சார்பில் நாங்கள் அறிவித்திருந்தோம். இந்நிலையில், இந்நிகழ்வுக்கு தடையுத்தரவு கோரியும், இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கக்கூடிய அஞ்சலி நிகழ்வுகளை இடைநிறுத்தக் கோரியும் யாழ். மாநகர ஆணையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஊடாக மனுவொன்றினைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நான் அறிகின்றேன்.

யாழ். மாநகர சபையின் முதன்மை நிறைவேற்று மக்கள் பிரதிநிதி என்ற வகையில் இவ்வழக்கானது யாழ். மாநகர முதல்வரின் பெயர் குறிப்பிட்டே தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அரச உயர் அதிகாரி ஒருவரின் மீது இவ்வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதானது அரச நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்தி எமது மக்களின் அபிலாஷைகளை முடக்குவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற சதி முயற்சியாகவே எண்ணத் தோன்றுகின்றது.

நாம் மக்கள் பிரதிநிதிகள், நம்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற மக்களால் ஜனநாயகத் தேர்தல்களினூடாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள். நாம் மக்களுக்காக குரல் கொடுக்க வந்தவர்கள். எனவே, மக்களோடு தொடர்புள்ள நிகழ்வொன்று தொடர்பில் யாழ். மாநகர சபைக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளும், நிறைவேற்று அதிகாரப் பிரதிநிதியாக, யாழ். மாநகர முதல்வராக நானும் இருக்கின்றபோது இவ்விடயங்களுக்குப் பொறுப்புக்கூறும்படி அரச அதிகாரிகளைப் பணிப்பது சட்டபூர்வமானதா என்றும் சிந்திக்கத் தூண்டுகின்றது.

எனவே, நினைவு நாள் ஏற்பாடுகளை யாழ். மாநகர சபை மக்களின் விருப்பை அடிப்படையாகக் கொண்டு முழுமையான அர்ப்பணிப்போடு செயற்படும் என்றும், இலங்கை ஜனநாயக சோசலிஸக் குடியரசின் நடைமுறையில் இருக்கும் சட்ட யாப்புக்கு அமைவாகவும் நீதிமன்ற நடைமுறைகளை மதித்தும் சட்டரீதியாக இவ்விவகாரங்களைக் கையாள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம் என்பதையும் மக்களுக்கு அறியத் தருகின்றோம்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நீதிமன்றிலே இவ்வழக்கு தொடர்பில் யாழ். மாநகர சபை சார்பில் நாம் ஆஜராகுவதோடு எமது முழுமையான கவனத்தையும் செலுத்துவோம். எமது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகிய எமக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறுகின்ற நிகழ்வுகளைத் தடுக்கும் உரித்து வேறு எவருக்கும் கிடையாது.

எமது மக்களின் விடுதலை வேண்டிய உணர்வுகளை சட்டத்தைக் கொண்டு அல்லது அதிகாரத்தைக் கொண்டு மழுங்கடிக்க முடியாது என்பதை மிக வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சர்வதேச சட்ட நியமங்களினாலும், ஒப்பந்தங்களினாலும், ஜெனிவா பிரகடனம், நல்லிணக்க உரிமைகளை நிலை நிறுத்தும் முழுமையான சூழ்நிலையினை நிலைநிறுத்துவதற்கும் நாம் அர்ப்பணிப்போடு செயற்படுவோம். தியாக தீபம் தியாகி திலீபனின் நினைவு தினம் எவ்வித மாற்றங்களும் இன்றி நாம் எண்ணியிருந்த அமைப்பிலே இடம்பெறுவதற்கு நாம் முழுமையான உறுதியோடு முன்னகர்வோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *