வலி. வடக்கில் காணிகள் சுவீகரிப்பை கைவிடாவிடின் தடுத்து நிறுத்துவோம்! – அரசுக்கு மாவை எம்.பி. எச்சரிக்கை

“வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 270 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடு எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (18) திங்கட்கிழமை காலை பிரதமரிடம் தொடர்பு கொண்டு நில அளவீடுகளை நிறுத்தும்படி கேட்டுள்ளேன். சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவீட்டுப் பணிகளை அன்றைய தினத்துக்கு முன்னர் நிறுத்தாதுவிட்டால் நாம் அதைத் தடுத்து நிறுத்தப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:-

“ஜனாதிபதி செயலகக் கூட்டத்தில் இவ்விடயத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதியுடன் வாதத்தில் ஈடுபட்டிருந்தார். நாடாமன்றத்தில் தலைவர் சம்பந்தனும் நானும், கேப்பாப்பிலவு நில சுவீகரிப்புச் சம்மந்தமாகவும், வலி. வடக்கு நில சுவீகரிப்புச் சம்பந்தமாகவும் கடந்த 12ஆம் திகதி பேசியிருக்கின்றோம். எங்கள் தரப்பில் தொடர்புள்ள ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பிரதமர் இதற்கு முன்னரே காணி அமைச்சரிடத்தில் எம் முன்னிலையிலேயே சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். நேற்றுக் காலை பிரதமரிடம் தொடர்பு கொண்டு நில அளவீடுகளை நிறுத்தும்படி கேட்டுள்ளேன். சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவையும் காணி அமைச்சு செயலாளரையும் சந்தித்து காணி அளவீடு செய்யும் நடவடிக்கையை நிறுத்தும்படியும் கடித மூலம் கேட்டுள்ளேன்.

இப்போது ஜே/226 பகுதியில் நகுலேஸ்வரம் தொடர்புபட்ட நிலங்களையும் சுவீகரிக்க எதிர்வரும் 22ஆம் திகதி அளவீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது.

22ஆம் திகதிக்கு முன்னர் காணி அளவீடு நடவடிக்கைகளை நிறுத்தாதுவிட்டால் நாம் அதை தடுத்து நிறுத்தப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்.

உயர்நீதிமன்றில் எமது வழக்குகள் இப்போதும் இருக்கின்றன. உயர்நீதிமன்றத்திலும் ஆட்சேபனை தெரிவித்து சுவீகரிப்பு நடவடிக்கைகளை தடுக்க முயற்சி செய்வோம் என உறுதிப்படுத்துகின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *