பீட்சா டிலிவரி செய்தவருக்கு கொரோனா தொற்றால் 72 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

டெல்லியில் பீட்சா விநியோகம் செய்தவருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதியானது. இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்த நிலையில், நோய்த்தொற்று பரவலைக்   கட்டுப்படுத்துவதற்காக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமர் மோடி கடந்த மாதம் 24ம் தேதி அறிவித்தார். இருப்பினும், கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால், ஊரடங்கை நீட்டிப்பதற்கு பெரும்பாலான மாநில அரசுகள் ஆதரவு  தெரிவித்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம், நாட்டு மக்களிடன் 4-வது முறையாக உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அதிரடியாக அறிவித்தார்.

மேலும், நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே, ஊரடங்கு காலகட்டங்களில் பொதுமக்களுக்கு உணவுகள் தடையின்றி கிடைக்கும் வகையில்  ஆன்லைன் உணவு நிறுவனங்களுக்கு மட்டும் வீட்டுகளுக்கு சென்று உணவு டெலிவெரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள வீடுகளுக்கு பீட்சா டெலிவெரி செய்யும் நபர் ஒரு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லி பகுதியில் கடந்த 12 ஆம் தேதி முதல்  நேற்று வரை 19 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் பீட்சா டெலிவெரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். திடீரென அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு மருத்துவமனையில் ரத்த  மாதிரிகளை எடுத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவருக்கு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, கடந்த 3 நாட்களாக அவர் பீட்சா டெலிவெரி செய்த 72 வீடுகள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவருடன் தொடர்பில்  இருந்த 17 உணவு விநியோகம் செய்யும் இளைஞர்களும் அரசு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  டெல்லியில் உணவு டெலிவெரியில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *