நீதிமன்ற உத்தரவை அவமதித்து நீராவியடியில் காவிகள் அடாவடி! – ஆலய வளாகத்துக்குள் தேரரின் உடல் தகனம்

முல்லைத்தீவு, செம்மலை – நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையின் விகாராதிபதி கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை ஆலயத்துக்கு அப்பாலுள்ள இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் தகனம் செய்ய முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று நண்பகல் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவையும் மீறி தமிழ் மக்களைப் பொலிஸார் தடுக்க நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினரால் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் கொழும்பில் உயிரிழந்த கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வளாகத்தில் தகனம் செய்ய பௌத்த தேரர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக, நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில், இன்று காலை வரை சடலத்தைப் புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ கூடாது என இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை இந்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் சார்பாக, சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

இரு தரப்பும் தமது வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து, ஆலய வளாகத்துக்கு வெளியில் பிக்குவின் உடலைத் தகனம் செய்வதற்கு ஆட்சேபனையுள்ளதா எனப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்திடம் நீதிவான் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் ஆலோசித்து பதிலளிக்குமாறும் அவர் அவகாசம் வழங்கினார்.

சிறிய இடைவேளையின் பின்னர் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, ஆலய வளாகத்தில், அதன் சூழலில் பிக்குவின் உடலைத் தகனம் செய்வதைத் தாம் எதிர்ப்பதாக ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. உடலை உரிய இடத்தில் அடக்கம் செய்வதே பொதுவிதி என்பதைச் சுட்டிக்காட்டிய ஆலய நிர்வாகத்தினர், உடலை சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யும்படியும் கோரினர்.

நீண்ட விசாரணையின் பின்னர் ஆலயத்துக்கு அப்பால் உள்ள இராணுவ முகாமுக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்ய நீதிவான் உத்தரவிட்டார்.

எனினும், இந்த உத்தரவையும் மீறி ஆலய வளாகத்துக்குள் – நீராவியடிப் பிள்ளையார் ஆலயத் தீர்த்தக்கேணி அருகில் விகாராதிபதியின் உடல் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவினரால் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கொழும்பிலிருந்து பிக்குகளினால் பஸ்களில் அழைத்துவரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் கலந்துகொண்டனர்.

குறித்த இடத்தில் தமிழ் மக்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் ஓரணியில் திரண்டு பிக்குகளின் அடாவடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இருப்பினும் பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதுடன் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்வதற்கு ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் மற்றும் சிங்கள மக்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பும் வழங்கினர்.

தமிழரின் மத உணர்வைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் பௌத்த பிக்குகளும், பொலிஸாரும் நடந்துகொண்டுள்ளமை தமிழ் மக்களின் மனங்களைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது.

“நீதிமன்றக் கட்டளையை மீறிப் பிக்குகள் நடந்துகொண்டுள்ள விதமும், அதற்குப் பொலிஸார் வழங்கிய ஒத்துழைப்பும் நல்லிணக்கணம் மீதான நம்பிக்கையைச் சிதறடித்துள்ளது. சட்டம், ஒழுங்கு அனைவருக்கும் சமம் என்று கூறப்படும் நிலையில் தற்போது நடந்துள்ள சம்பவம் தமிழ் மக்கள் நீதித்துறை மீதும், பொலிஸார் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையைத் தவிடுபொடியாக்கியுள்ளது” – என்று தமிழ் கருத்துத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *