பௌத்த பிக்குகளின் அராஜகத்தைக் கண்டிக்கிறது தமிழ்க் கூட்டமைப்பு!

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோயில் வளாகத்துக்குள் – தீர்த்தக் கரைப் பகுதியில் பெளத்த தேரர் ஒருவரின் பூதவுடல் பலவந்தமாகத் தகனம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. வெளியிட்ட கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“இந்தக் கோயிலுக்கும் அங்கு புதிதாக அமைக்கப்பட்ட விகாரைக்கும் இடையிலான பிணக்குச் சம்பந்தமாக ஏற்கனவே நீதிமன்றத்தின் ஒரு வழிகாட்டல் உத்தரவு உள்ளது.

இரண்டு தரப்பினரும் தத்தமது சமயக் கடமைகளை மற்றவருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

அப்படியிருக்கையில், இந்துமத மக்களின் நம்பிக்கையை அவமானப்படுத்தி, அகெளரப்படுத்தும் வகையில் இந்துக் கோயில் பிரதேசத்துக்குள், அந்த மதத்தின் பாரம்பரியங்கள், வழிபாட்டு முறைகளுக்கு மாறாக ஒருவரின் சடலம் எரியூட்டப்பட்டுள்ளது. இது மிகுந்த கண்டனத்துக்குரிய அத்துமீறல் செயலாகும்.

அதற்கு அப்பாலும் போய், நீதிமன்றக் கட்டளையையும் மீறி நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் இவ்வாறு சடலத்தை அங்கு தகனம் செய்திருக்கின்றமை தொடர்பில் சம்பந்தப்பட்டோர் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.

மேலும், சட்டத்தரணி ஒருவர் தாக்கப்பட்டமை மிகுந்த கண்டனத்துக்குரியது. வேதனைக்கும் விசனத்துக்கும் உரியது.

உடனடியாக நடவடிக்கை எடுத்து இக்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் சட்ட ரீதியாகக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வற்புறுத்துகின்றோம்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *