கோட்டா களமிறங்கினால் தோல்வியடைவது நிச்சயம்! – அவருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவில்லை என்கின்றார் ராஜித

“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டால் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதரவளிக்கமாட்டார்கள். அவரால் நாடளாவிய ரீதியில் 50 சதவீதமான வாக்குகளைக்கூடப் பெற முடியாது.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணி அரசின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அமைச்சர் ராஜித சேனாரத்ன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

‘எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் உங்களுக்குச் சவாலாக இருப்பார் என்று கருதுகின்றீர்களா?’ என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“கோட்டாபய வேட்பாளராகக் களமிறங்கினால் சிறுபான்மையினரின் வாக்குகள் அவருக்குக் கிடைக்கப்போவதில்லை. அத்துடன், அவர் வேட்பாளராகக் களமிறங்கினால் பூஜ்ஜியத்திலிருந்தே வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். அவர் வேட்பாளராகப் போட்டியிடுபவாராயின் சிறுபான்மையினத்தவர்களின் 23 சதவீதம் வரையிலான வாக்குகள் எமக்குக் கிடைப்பது உறுதியாகிவிடும். ஆகவே, நாம் 23 முதல் 25 சதவீதத்திலிருந்துதான் வாக்குகளைச் சேகரிக்க வேண்டியேற்படும். எமக்கு மேலதிகமாக 27 சதவீதமான வாக்குகளே அவசியமாக இருக்கும். அச்சதவீத வாக்குகளை தென்னிலங்கையில் மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். அதில் எமக்கு எவ்விதமான பிரச்சினையும் இருக்கப்போவதில்லை.

மஹிந்த தரப்பின் முக்கியஸ்தர்கள் எம்முடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுகின்றபோது கோட்டாபய ராஜபக்ச வேட்பாளராகக் களமிறக்கப்பட்டால் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற முடியாது என்று கூறுகின்றார்கள். அதுமட்டுமன்றி இரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றபோது கோட்டாபய மற்றைய நபரிலிருந்து 7 சதவீதமான வாக்குகள் பின்னடைவாகவே பெறுவார் என்றும் கூறுகின்றார்கள். அவ்வாறு பார்க்கும்போது அவர் களமிறங்குவதால் எமக்கு எவ்விதமான சவாலும் ஏற்படப்போவதில்லை.

தமிழ், முஸ்லிம் மக்கள் ராஜபக்சவின் ஆட்சியில் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆகவே, அவர்கள் ஜனநாயகத்துக்கு விரோதமாக, இருண்ட ஆட்சியொன்றை மீண்டும் நாட்டில் உருவாக்குவதற்கு இடமளிக்கமாட்டார்கள்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *