சவேந்திரவின் நியமனத்துக்கு எதிராக புலிகளின் பினாமிகள் கூக்குரல் எழுப்புவதை நிறுத்த வேண்டும்! – கோட்டா மிரட்டல்

“முள்ளிவாய்க்கால் வரையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் முட்டி மோதிப் போரிட்டவர்தான் சவேந்திர சில்வா. அப்படிப்பட்ட ஒருவர் மீது விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் சர்வதேச அமைப்புக்கள் வீண் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றன. சவேந்திர சில்வா இராணுவத் தளபதி பதவிக்கு முழுத் தகுதியுடையவர். அவருக்கு எதிராக கூக்குரல் எழுப்புவதை அனைத்துத் தரப்புக்களும் உடனே நிறுத்தவேண்டும்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கனடா, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், ஐ.நா. பொதுச் செயலர் ஆகியோர் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் சவேந்திர சில்வாவின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது. இறுதிப் போரை களத்தில் நின்று வழிநடத்தியவர் அவர். முள்ளிவாய்க்கால் வரையில் விடுதலைப்புலிகளுடன் முட்டி மோதிப் போரிட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் மீது விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் சர்வதேச அமைப்புக்கள் வீண் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றன.

ஒருவர் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினால் அவர் குற்றவாளி என்று அர்த்தமில்லை. சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. போர்க் களத்தில் வல்லமை பொருந்திய தளபதியாகச் செயற்பட்ட சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக பதவி வகிப்பதற்கு சகல தகுதியும் உடையவர். அவரை அந்தப் பதவிக்கு நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *