தமிழரின் பிரச்சினைக்காகக் குரல் கொடுத்தவர் சுஷ்மா! – கூட்டமைப்பு இரங்கல்

“இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தமிழ் மக்களின் பிரச்சினைக்காக உணர்வுபூர்வமாக குரல் கொடுத்த ஒரு தலைவர் அவர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சுஷ்மா சுவராஜ் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் மிகக் கவனமாகச் செயற்பட்ட ஒரு தலைவராவார். குறிப்பாக இலங்கைக்கு வருகை தந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பை சந்திக்க அவர் தவறியதில்லை என்பதோடு அது போன்ற அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தார்.

இந்து சமுத்திர விடயம் தொடர்பாக இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் என்னையும் சந்தித்துப் பேசியிருந்த அவர் , தமிழ் மக்களுக்கு விரைவில் அரசியல் தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மிகவும் தீர்க்கமாகத் தாம் கூறியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்திய நாடாளுமன்றக் குழவுக்குத் தலைமை தாங்கி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இந்த விஜயத்தின்போது இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பில் காத்திரமான அறிக்கையொன்றையும் வெளியிட்டிருந்தார். மஹிந்த ஆட்சி காலத்தில் இரா.சம்பந்தனுடன் இணைந்து விரைவில் அரசியல் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தியிருந்தார்.

தமிழர் தொடர்பான பிரச்சினைகள் மாத்திரமின்றி ஏனைய பல விடயங்களிலும் அவர் அவதானம் செலுத்தியதோடு மாத்திரமின்றி அவற்றுக்கான தீர்வை வழங்கியுள்ளார். கடந்த காலங்களில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோருடன் நானும் இந்தியா சென்றிருந்தேன்.

அதன்போது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிக்கின்றமை தவறு என்று குறிப்பிட்டிருந்தார். அத்தோடு இவரது தலையீட்டிலேயே இழுவைப்படகுகள் முற்றாக தடை செய்யப்பட்டன. அவை தொடர்பான முழுமையான அறிக்கையும் இவரால் வெளியிடப்பட்டது.

தனது தரப்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் நியாயத்தின் பக்கம் நின்று அதற்காக போராடிய இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *