சொற்போரால் அதிர்ந்தது சர்வகட்சிக் குழுக் கூட்டம்! – மாற்றுத் தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும் எனவும் மைத்திரிக்கு சம்பந்தன் சாட்டையடி

“நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் நிலையில், புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு என்ன அவசரம் என்று சர்வகட்சிக் குழுக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னீர்கள்.?

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைக் கடிந்துகொண்டார்.

இதன்போதும், “நீங்கள் அரசியல் தீர்வுக்குத் தயார் இல்லையென்றால் சொல்லுங்கள், நாங்கள் மாற்றுத் தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும்” என்று சம்பந்தன் தக்க பதிலடியும் கொடுத்தார்.

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தேக்கமடைந்திருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துக் கோரியிருந்தார். அந்தக் கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சிக் குழுக் கூட்டத்தை நேற்றுக் கூட்டினார்.

கூட்டம் ஆரம்பித்ததும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரா.சம்பந்தனை நோக்கி, இந்த சர்வகட்சிக் குழுக் கூட்டத்தை ஏன் அவசரமாக கூட்டச் சொன்னீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் அடுத்த கட்டப் பணிகள் தொடர்பில் ஆராய்வதற்கே கூட்டத்தைக் கூட்டச் சொல்லிக் கேட்டதாக சம்பந்தன் பதிலளித்துள்ளார்.

அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்ற சூழலில், இந்த விடயம் தொடர்பில் ஏன் அவசரம் காட்டுகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் தேர்தலின்போது நீங்கள் வாக்குறுதி வழங்கியிருந்தீர்கள். அந்தப் பணியை முன்னெடுக்க நாடாளுமன்றம் அரசமைப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. அதனை ஏகமனதாக எல்லோரும் ஆதரித்திருந்தார்கள். வழிநடத்தல் குழு உள்ளிட்ட புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகள் யாவும் தங்களின் அனுமதியுடன் முன்னெடுக்கப்பட்டது. ஒக்டோபர் 26ஆம் திகதி அரசியல் குழப்பம் காரணமாக புதிய அரசமைப்பு உருவாக்கப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும். புதிய அரசமைப்பு ஊடாகவே நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். இந்த விவகாரத்தை தூக்கி வீச முடியாது. அதிகாரத்தைப் பகிர்ந்து அரசியல் தீர்வை உங்களால் வழங்க முடியுமா? இல்லையா? என்பதைக் கூறுங்கள். நாடு பிளவுபடாமல் இருக்கவே விரும்புகின்றோம். நீங்கள் அரசியல் தீர்வுக்குத் தயார் இல்லையென்றால் சொல்லுங்கள், நாங்கள் மாற்றுத் தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும்” – என்று சம்பந்தன் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிக்கும் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நீண்ட நேரம் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இதையடுத்தே அதிகாரப் பகிர்வை அரசமைப்பினுள் எப்படி புகுத்துவது – அதனைச் செயற்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 4 பேர் கொண்ட புதிய குழு நியமிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *