ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரால் ஆட்சியைப் பிடிக்கச் சிலர் முயற்சி! – யாழில் ரணில் சாடல்

“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரால் சிலர் இன மோதலை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இவ்வாறான இனமோதல்களை ஒரு குழுவே திட்டமிட்டு மேற்கொள்கின்றது. அந்தக் குழு நாட்டில் பல பகுதிகளில் இனமோதலை உருவாக்க முயற்சித்த நிலையில் நாங்கள் அதனை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். இனியும் தடுத்து நிறுத்துவோம்.”

– இவ்வாறு யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க.

“தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணியவர்களுக்கும் எந்தக் காலத்திலும் மன்னிப்பு கிடையாது. மீண்டும் இந்த நாட்டில் பயங்கரவாதம் தலைதுாக்க இடமளிக்கப்படாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமுர்த்தி பயனாளிகளுக்கான உரித்துப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னா் நாட்டில் அபிவிருத்திகள் தடைப்பட்டுள்ளன. இந்தச் சந்தா்ப்பத்தில் நாட்டில் உள்ள சகல மதத் தலைவா்களுக்கும் நன்றி கூறவேண்டியவனாக இருக்கின்றேன். குறிப்பாக கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டில் சமாதானத்தை உண்டாக்கக் கடுமையாக உழைத்திருக்கின்றார். அதேபோல சகல மதத் தலைவா்களும் ஒன்றிணைந்த இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதுாக்க கூடாது என்பதற்காகப் பணியாற்றியுள்ளார்கள்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடா்பாக நாங்கள் முன்னதாக அறிந்திருக்கவில்லை. அதற்கு சாய்ந்தமருதுப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்கச் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணையவேண்டும். நாட்டில் தற்போது சூழல் நன்றாக இருக்கின்றது.

வாரியப்பொல உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. முஸ்லிம் மக்களின் வா்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. அவற்றுக்கு இழப்பீடுகள் வழங்கப்படும். எங்கள் அமைச்சா்கள் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைச் செய்திருக்கின்றார்கள்.

இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடா்பாக பூரணமான விசாரணைகள் நடத்தப்படும். இந்தத் தாக்குதல் சம்பவங்கள் திட்டமிட்ட சதி என்றே நான் கூற விரும்கிறேன். இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிக்கச் சிலா் நினைக்கிறார்கள். நீா்கொழும்புப் பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

அதற்குக் காரணம் வதந்தி. இவ்வாறு பல தாக்குதல் திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில் அவற்றை நாங்கள் முறியடித்திருக்கின்றோம். தீவிரவாதிகளுக்கு மனிதாபிமானம் என்பது கிடையாது. ஆகவே, இவ்வாறான தாக்குதல்களுக்கு இனிமேல் இடமளிக்கப்படாது. பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

தீவிரவாதத் தாக்குதல்களின் பின்னா் நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சி கண்டுள்ளதாகச் சிலா் கூறினார்கள். ஆனால், நாங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாடசாலைகளைத் திறந்திருக்கின்றோம்.

முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை நன்கு திட்டமிட்டு ஒரு குழு நடத்தியிருக்கின்றது. அதற்குள் தனிப்பட்ட முரண்பாடுகளும் இருக்கின்றன.

இந்தநிலையில் நாட்டின் பாதுகாப்புக்காக இராணுவத்தினரும், பொலிஸாரும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அவா்களுக்கு பொதுமக்கள் பூரணமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

இனவாதம் மீண்டும் தலைதூக்கினால் நாடும் அழிந்துவிடும், நாமும் அழிந்துவிடுவோம். தாக்குதல்களினால் நாடு பாரிய பின்னடைவுகளைச் சந்தித்திருக்கின்றது. இவற்றிலிருந்துமீள்வதற்கு இன்னும் 2 மாதங்கள் தேவை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *