இலங்கையில் நேற்று உணரப்பட்ட நில அதிர்வு!

கண்டி, அநுரகம பிரதேசத்தில் நேற்று (29) உணரப்பட்ட நில அதிர்வு குறித்து விசாரணைகளை மேற்கொள்ள, புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின், பூகம்பம் தொடர்பான பிரிவு அதிகாரிகள் குழுவொன்று குறித்த பிரதேசத்திற்குச் சென்றுள்ளது.

பணியகத்தின் பணிப்பாளர் நாயகம், பொறியியலாளர் டி. சஜ்ஜன டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

நேற்று (29) இரவு 8.30 – 8.40 மணிக்கிடையில் கண்டி விக்டோரிய நீர் வீழ்ச்சிக்கு அருகில் குருதெனிய, அநுரகம, ஹாரகம, சிங்காரகம, மைலபிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டதாக குறித்த பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒரு நிமிடத்திற்கு இந்நிலை தொடர்ந்ததாகவும், இதன்போது நிலத்தின் அடியில் ‘ஹம்’ என்று சத்தம் காணப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குண்டு வெடித்தது போன்றும் இருந்ததாக ஒரு சில பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, பாரிய சத்தம், மற்றும் கதவுகள், யன்னல்கள் அதிர்வு போன்றன உணரப்பட்டுள்ளதோடு, பல வீடுகளின் சுவர்கள் மற்றும் நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இவ்வதிர்வானது, புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் பல்லேகேல மையத்திலுள்ள நில அதிர்வு மானி உள்ளிட்ட எந்தவொரு மானியிலும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் உறுதியாக எதனையும் தெரிவிக்க முடியாதுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலைய பிரிவின் பணிப்பாளர் இந்திக ரணவீர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *