தமிழரை மைத்திரி ஏமாற்றிவிட்டார்; இனி நிதானமாக முடிவெடுப்போம்! – ரணில் முன் மாவை காட்டம்

“நாம் ஆதரவளித்து கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றிவிட்டார். ஆகவே, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பாக நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் பங்கேற்ற சமுர்த்தி உதவி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாம் ஆதரவு தெரிவித்து அரசைக் கொண்டு வந்தபோதும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாறாகவே ஜனாதிபதி செயற்படுகின்றார். இந்த ஏமாற்றம் எமக்குக் கவலையளிக்கின்ற நிலையில் எதிர்காலத்தில் சிந்தித்து நிதானமாகவே முடிவெடுப்போம்.

தமிழர்கள் விடயத்திலும் இனப் பிரச்சினை விடயத்திலும் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றுவரை அரசு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

தமிழின வரலாற்றில் 60ஆண்டுகளாக இனப்பிரச்சினை விடயத்தில் ஏமாந்து வருகின்றோம்.தென்னிலங்கை அரசினால் தொடர்ச்சியாக வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம்.

போரின் பின்னர் நடைபெற்ற ஒடுக்குமுறையான ஆட்சியை வீழ்த்தி மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசைக் கொண்டு வந்தோம். இந்த அரசில் அங்கம் வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றிவிட்டார்.

நல்லாட்சி அரசில் நீண்டகாலப் பிரச்சினையான இனப் பிரச்சினைக்குத் தீர்வாகக் கொண்டு வரப்பட்ட புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் இடைக்கால அறிக்கை வெளியாகியிருக்கிறது. பின்னர் நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாகக் கூடவிருந்தது அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருந்தது. ஆனால், அதற்கிடையில் எந்தக் கட்சிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடாது திருட்டுத்தனமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் பிரதமாராகக் கொண்டு வந்தார் மைத்திரி. இதனால் வரவு – செலவுத்திட்டம் உட்பட அனைத்து விடயங்களும் இழுத்தடிக்கப்பட்டன.

தமிழின வரலாற்றில் நாம் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை வஞ்சிக்கப்பட்டு வருகின்றோம்.அண்மையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களில்கூட அதிகமாக தமிழர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். போரிலும் தமிழர்களே அதிகமாகக் கொன்றழிக்கப்பட்டனர்.

நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து சர்வதேச உளவுத்துறை மற்றும் சர்வதேசக் கண்காணிப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும்கூட அரசு தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைத் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை. இது எமக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது. எனவே, எதிர்வரும் காலங்களில் எந்தத் தேர்தல்களிலும் நாம் நிதானமாகச் சிந்தித்து செயற்பட வேண்டிய கட்டாய காலத்தில் உள்ளோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *