பொலிஸ்மா அதிபரும் பதவி துறப்பு!

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும் பதவி விலகியுள்ளார். இந்தத் தகவலை ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று காலை நடத்திய சந்திப்பின்போது பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை பதவி விலகல் கடித்தத்தை வழங்குவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அவர் அவ்வாறு கூறி சிறிது நேரத்துக்குள் பொலிஸ்மா அதிபர் தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உதிர்த்த ஞாயிறு தினமன்று நாட்டில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தேசிய புலனாய்வுத் துறை முன்கூட்டியே பாதுகாப்புத் துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இருவரையும் பதவி துறக்குமாறு ஜனாதிபதி நேற்றுமுன்தினம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், தமது பதவியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்று மாலை இராஜிநாமா செய்திருந்த நிலையில், இன்று பொலிஸ்மா அதிபரும் தனது பதவியைத் துறந்துள்ளார்.

புதிய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் புதிய பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் விபரங்கள் தொடர்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *