சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாதத்துக்குச் சமாதி! – சபையில் பிரதமர் திட்டவட்டம்

சர்வதேச ஆதரவைப் பெற்று தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சில இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்து பிரதமர் உரையாற்றினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“இன்று நாம் உலகளாவிய தீவிரவாதத்தை எதிர்கொண்டுள்ளோம். அரசியல் ரீதியிலான பயங்கரவாதத்தையே நாம் எதிர்கொண்டிருந்தோம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை முஸ்லிம் சமூகத்தினர் எதிர்க்கின்றனர். முஸ்லிம் சமூகத்தினர் இதற்கு எதிராக அனைவரையும் ஒன்றுதிரட்டி செயற்படவேண்டும்.

1987ஆம் ஆண்டு தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் ஒற்றுமை நிலவவில்லை. இனவாதப் பிரச்சினை காரணமாக அப்போதைய பயங்கரவாதம் நீண்டநாள் நீடித்தது.

தமிழ் – சிங்களப் புத்தாண்டில் எமது பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெற்று அபிவிருத்தி அடைந்துவரும் நேரத்தில் இந்தத் தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை பயங்கரவாதத்துக்கு எதிரான எமது நடவடிக்கைகளுக்குச் சகல உதவியும் தருவதாகத் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர், இந்தியா நாட்டுத் தலைவர்கள் சம்பவத்தை அடுத்து எம்முடன் தொடர்பு கொண்டனர். பாகிஸ்தான் பிரதமர் சார்பில் அந்நாட்டு வெளிநாட்டு அமைச்சர் என்னுடன் தொடர்புகொண்டார்.

இதேபோன்று ஜப்பான் பிரதமர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ரஷ்ய நாட்டுத் தலைவர்கள் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் எம்முடன் தொடர்புகொண்டனர். தற்போது எமக்கு சர்வதேச ரீதியில் முழுமையான உதவி கிட்டியுள்ளது.

நாம் இதனை இந்தத் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காகப் பயன்படுத்துவோம். இந்தத் தீவிரவாதத்தை திட்டமிட்ட நபர்கள் இருக்கின்றனர் .இவர்களை பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்து வருகின்றனர். அவசரகாலச் சட்டம் அல்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று பொலிஸாருக்கும் இந்த அதிகாரம் உண்டு.

இந்த விடயத்தில் நாடாளுமன்றம் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்களின் ஒத்துழைப்புப் பெற்று செயற்படுவோம். தீவிரவாதத்தை எம்மால் தோற்கடிக்க முடியும்.

எதிர்க்கட்சியினர் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது வரவேற்கத்தக்கதாகும். ஆனால், பைத்தியம் பிடித்த நாய்கள் போன்று கத்துவது முறையல்ல” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *