ஐ.தே.கவுக்குள் மோதல் உக்கிரம்: சஜித், ரவிக்கு ரணில் வாய்ப்பூட்டு!

பொது வெளியில் கருத்து மோதலில் ஈடுபடுவதை உடன் நிறுத்துமாறு அமைச்சர்களான சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கிடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது. இருவரும் பகிரங்கமாகவே சரமாரியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர்.

இதனால்,தேர்தலொன்று அறிவிக்கப்படும் பட்சத்தில் ஐ.தே.கவுக்குள் பெரும் குழப்பம் ஏற்படும் என அரசியல் களத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க மேற்படி கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.

ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளரான அமைச்சர் நவீன் திஸாநாயக்க நேற்று வியாழக்கிழமை மேற்படி தகவலை வெளியிட்டார்.

“அமைச்சர்களான ரவி கருணாநாயக்கவும் சஜித் பிரேமதாஸவும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள். அவர்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பின் அவை குறித்து கட்சிக்குள் கலந்துரையாடித் தீர்வைப் பெறுமாறும், பொதுவெளியில் கருத்து மோதலில் ஈடுபடுவதை நிறுத்துமாறும் இருவருக்கும் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரசிமசிங்க தொலைபேசி ஊடாக பணிப்புரை விடுத்துள்ளார். எனவே, இனிக் குழப்பம் ஏற்படாது. கட்சிக்குள் நாம் இந்த விடயங்களைப் பேசி கருத்து முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்று நவீன் கூறினார்.

“தந்தையின் பெயரை வைத்து அரசியல் செய்யமுடியாது” என ரவியும், “வங்கிக் கொள்ளை அடித்து நான் அரசியல் செய்யவில்லை” என சஜித்தும் கூறிய கருத்துக்களே மோதலுக்கு வித்திட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *