தொண்டாவின் கண்கள் சிவக்க காரணம் என்ன? திலகர் கேள்வி

” சம்பளத்துக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்துக்கான முறைமை மாற்றத்தையே நாம் கோருகின்றோம்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தற்போது   நடைபெற்றுவரும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
பெருந்தோட்டத்தொழிலாளர்களே பொருளாதாரத்தின் முதுகெலும்பு என சொல்லி பழக்கப்பட்டுவிட்டோம். உண்மை அதுவல்ல. இன்று முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டது.
ஏற்றுமதிக்கு அத்துறையிலிருந்து  22 சதவீத பங்களிப்பே வழங்கப்படுகின்றது.  ஏனையவை சிறுதோட்டப் பகுதிகளிலிருந்ததான் கிடைக்கப்பெறுகின்றன.
எனவே, பெருந்தோட்டத்தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக, சுயாதீன தொழிலாளர்களாக மாற்றப்படவேண்டும். இதுவே அனைத்து பிரச்சினைகளுக்குமான சிறந்த தீர்வு வழியாக அமையும்.
முறைமை மாற்றம் என்பது சம்பளத்துக்கான  முறைமை மாற்றம்  அல்ல. ஒட்டுமொத்த சமூகத்துக்கான முறைமை மாற்றத்தையே  கோருகின்றோம்.
இதற்கு முன்னர் சபையில் ஏழு பேர்ச்சஸ் காணி குறித்தும், நான்கு பேர்ச்சஸ் பற்றியும் முன்னாள் அமைச்சர்  ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. கண்கள் சிவக்க , கோபத்துடன் உரையாற்றினர். அவரின் கண்கள் சிவக்க கோபமா அல்லது வேறு ஏதும் காரணமா என்று தெரியவில்லை.
ஆனால், லயத்துக்கு மேல் லயன் வைத்து –  மாடி லயம் கட்டிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு காணி உரிமை பற்றி கதைப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன். தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியாலேயே  எம்மக்களுக்கு காணி உரிமை கிடைத்தது.
4 ஆயிரம் வீடுகள்
4 ஆயிரம் வீடுகளுக்கும் சிலர் உரிமை கொண்டாடுகின்றனர். இதன் பின்னணி என்ன?
வடக்கு, கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்க இந்திய அரசு முன்வந்தது. முழுவதுமாக தமிழ் மக்களுக்கு சென்றதால் முஸ்லிம் மக்களுக்கும் வீடுகள் வேண்டும் என கோஷம் எழுந்தது.
இதையடுத்தே முஸ்லிம் மக்களுக்கு 6 ஆயிரம் வீடுகளும், இந்திய வம்சாவளி மக்களுக்கு 4 ஆயிரம் வீடுகளும் பகிரப்பட்டன. எனவே, 4 ஆயிரம் வீடுகள் குறித்து இ.தொ.கா. கூறும் கதை அப்பட்டமான பொய்யாகும்.
2015 ஆம் ஆண்டுவரை  குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நாம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி காட்டியதால்தான், மேலதிகமாக 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்தது.
வீட்டுத்திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. தொண்டமானின் வீடு வேவண்டனில் உள்ளது. அந்த தோட்டத்துக்கு அருகிலுள்ள எல்பொடை தோட்டத்தில் அண்மையில் 98 வீடுகள் கையளிக்கப்பட்டன. அதில் 96 பயனாளர்கள் இதொகாவைச் சேர்ந்தவர்களாவர்.
அன்று ஒருநிமிடம்கூட பேசாமல் இருந்த தொண்டமான், இன்று எட்டு நிமிடங்கள் உரையாற்றுகிறார். இதற்கு தோட்டத்தில் பிறந்து சபைக்கு வந்த திலகரே காரணம்.  ” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *