அரசு இழைக்கும் தவறுகள் கண்டு மெளனித்திருக்காது கூட்டமைப்பு! – சுட்டிக்காட்டத் தயங்கோம் என்கிறார் சி.வி.கே.

“அரசு இழைக்கும் தவறுகளைத் தெரிந்துகொண்டு நாங்கள் மௌனிகளாக இருப்பது தவறு. அதனடிப்படையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றது. அதனை நாங்கள் அரசியலுக்காகவோ தேர்தலுக்காகவோ செய்யவில்லை.”

– இவ்வாறு அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

“ஜெனிவாத் தீர்மானத்தின் பின்னர் கலப்புப் பொறிமுறை தொடர்பில் பேசப்படுகின்றது. குறிப்பாக முன்னாள் இந்திய நீதிபதி பகவதி தலைமையிலான குழு பற்றியும் கருத்து வெளியிடப்பட்டிருக்கின்றது. அவ்வாறு அவரது குழு முன்னர் வந்து ஒரு ஆலோசனைச் சபையாகத் தான் செயற்பட்டிருக்கின்றது. அதில் பகவதி நீதிபதியாக இருக்கவில்லை.

இங்கு நடந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை அல்லது அனுசரணை வழங்கும் அமைப்பாகத்தான் அது இருந்தது. ஆகவே, வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கிய பொறிமுறைதான் வேண்டுமென்று நாங்கள் சொல்கிறோம். ஆனாலும், குற்றங்களை விசாரணை செய்வதில் பகவதி ஆணைக்குழுவை உதாரணம் காட்ட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால், அது ஒரு செயற்பாடாக இருந்திருக்கிறது உண்மைதான். ஆனால், அவர் அந்த ஆலோசனையில் இருந்து அவர் விலகிகக் கொண்டிருக்கின்றார். அது இலங்கையில் சுயாதீனமான நீதி நிர்வாகம் செயற்பட முடியாது என்பதை பகவதியின் விலகல்கள் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது.

என்னைப் பொறுத்தவரை அத்தகையதெரு பொறிமுறை என்பது அரசுக்கு ஆதரவா? இல்லையா? என்பதற்கப்பால் அது உண்மையில் நீதிப் பொறிமுறை அல்ல. பகவதி ஆணைக்குழு அல்லது அவரது சம்பந்தம் உள்ளடங்கியதாகக் கூறுவது நீதிப் பொறிமுறை அல்ல. அது நீதி அனுசரணைதான். ஒரு ஆலோசனைதான் அது. ஆக நாங்கள் கேட்பது நீதி விசாரணைப் பொறிமுறைக்குள்ளே சர்வதேசம் சம்மந்தப்படவேண்டுமென்று தான்.

இன்று தெற்கிலே சரத் பொன்சேகா உள்ளிட்டவர்கள் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென்றுதான் சொல்கின்றார்கள். ஆனால், குற்றவாளிகளைக் காண்பதற்கு ஒரு விசாரணை தேவை தானே. தண்டனை என்பது அதன் பிறகு தானே. ஆகையால் அந்த விசாரணைக்குள்ளே இந்த நாட்டு நீதித்துறை மட்டும் தனித்து இல்லாமல் சர்வதேசம் இணைந்த விசாரணைப் பொறிமுறை வேண்டும். அவ்வாறான விசாரணைப் பொறிமுறை தான் எமக்கு வேண்டுமே தவிர ஆலோசனைச் சபை அல்ல. ஆலோசனைச் சபையினால் மட்டும் நீதிக்காகச் செயற்பட முடியாது என்பது தான் என்னுடைய கருத்து.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. அதைப்பற்றி நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், எங்கள் நிலைப்பாடு தெளிவானது. அதாவது இந்த நாட்டில் தனித்து உள்நாட்டுப் பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நீதியும் நியாயமும் கிடைக்காது. ஆகவே சர்வதேசம் சம்மந்தப்பட்ட விசாரணைதான் வேண்டும்.

அதே நேரம் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்று கூறுகின்றார்கள். குற்றம் இழைத்தவர்கள் என்று கண்டுபிடிப்பதற்கு ஒரு விசாரணை தேவை. அந்த விசாரணைக்கு சர்வதேச பொறிமுறைகள் உள்ளடக்கப்படவேண்டியது அவசியம். ஆனபடியால் அது சர்வதேச நீதிமன்றமாக இருக்கலாம் அல்லது வெளிநாட்டு நீதிமன்றமாக அல்லது நீதிபதிகள் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.

ஒரு தனித்த உள்நாட்டுப் பொறிமுறை தவிர்ந்த வெளிநாட்டு உள்ளடக்கப் பொறிமுறையே தேவை. அதுதான் கூட்டமைப்பின் நிலைப்பாடு. ஆதனடிப்படையில் தொடர்ந்தும் நாங்கள் அந்த நிலைப்பாட்டில் தான் இருக்கின்றோம்.

நாட்டில் நல்லாட்சி அரசு இருக்கின்றதா? இல்லையா? என்ற கேள்வி இருக்கின்றது. ஏனெனில் அது இருப்பது போன்றும் இல்லாதது போன்றும் தெரிகின்றது. ஆனாலும், இந்த நாட்டிலுள்ள அரசுகளைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் விடயங்களில் வழமையாகவே இந்த மாதிரியாகத்தான் செய்து கொண்டு வந்திருக்கின்றார்கள். ஆகவே, சர்வதேசத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றமாட்டோம் என்றும், அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அரசு கூறி வருகின்ற நிலையிலும் சர்வதேச மட்டத்தில் அத் தீர்மானங்களின் படிமுறைகளில் முன்னேற்றங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதாவது கடந்த காலங்களில் மனித உரிமைகள் ஆணையாளர்களின் அறிக்கைக்கும் பார்க்க இந்த வருட 2019ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் பல படிமுறை முன்னேற்றங்கள் இருக்கின்றன. இவ்வாறு மெல்ல மெல்ல இந்தக் கடுமைத் தன்மை வலியுறுத்தப்பட்டு வருகின்றபோது படிமுறை வாயிலாக ஒரு வகையில் இது ஐ.நா சபையினூடாக அனேகமாக பாதுகாப்புச் சபை மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லக் கூடிய சூழ்நிலைகள் உருவாகக் கூடிய நிலை ஏற்படும்.

அரகள் அந்தத் தீர்மானங்களை எந்த அளவுக்கு மறுதலிக்கிறார்களோ அல்லது சர்வதே தீர்மானங்களை நிறைவேற்ற மாட்டோம் என்று சொல்கிறார்களோ அந்தளவுக்கு நிலைமை இறுகிக்கொண்டுதான் வருகிறது. அது இன்னும் மேலும் இறுகின்றபோது இதற்கான செயற்பாடுகள் கடுமையானதாக மாறும் என்று தான் நான் நினைக்கிறேன்.

இத் தீர்மான விடயங்களாக இருக்கலாம் அல்லது வேறு விடயங்களாக இருக்கலாம் அதற்கு எதிராக அல்லது தமிழ் மக்களுக்கு விரேதமாக அரசு செயற்படுகின்றபோது அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத்தான் வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளுக்காக அரசை விமர்சிக்கவும் வேண்டும். அதனைத்தான் இன்று கூட்டமைப்பு செய்து வருகின்றது.

அதற்கமைய அரசு இழைக்கின்ற தவறுகள் தொடர்பில் அதற்கான கருத்துக்களைச் சரியாகச் சொல்லப்பட வேண்டுமோ அல்லது விமர்சிக்கப்பட வேண்டுமோ அதை அப்ப அப்ப சொல்வது தானே அரசியலும் நாகரிகமும். ஆகவே, அதனைக் குறித்து இப்போது பேச வேண்டிய நேரம் வந்துள்ளதால் பேசித்தான் ஆக வேண்டும். அரசை விமர்சிக்க வேண்டிய நேரத்தில் விமர்சிக்காமல் மௌனியாக இருப்பதும் தவறுதானே.

இப்போது சில சில காரியங்களை நாங்கள் செய்யவேண்டியும் பேச வேண்டி இருக்கிறது. ஆகையினால் அதற்கமைய செயற்படுகின்றோம்.

ஆனால், அது அரசியலுக்காகவோ அல்லது தேர்தலுக்காகவோ அல்ல. அவ்வாறான கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறான நிலையிலும் அரசுக்கு நாங்கள் முண்டு கொடுக்கின்றோம் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றதுதானே. அதேநேரம் அரசு விடும் தவறுகள் தொடர்பில் பகிரங்கமாகவே எங்கள் தலைவர்கள் பேசுகிறார்கள். இந்த அரசின் சில நடவடிக்கைகளை விமர்சிக்க வேண்டிய தேவை இருக்கின்றது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *