கொதிக்கிறது கொழும்பு அரசியல் – ஐ.நாவும் களத்தில் குதிப்பு ! ஹக்கீமுடன் தூதுவர் அவசர பேச்சு!!

ஜனநாயக விழுமியங்களுக்கும் பாரம்பரியங்களுக்கும் அப்பால், அரசியலமைப்புக்கு முரணாக கடந்த சில நாட்களாக இங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் எல்லைமீறி வீதிக்கு வருகின்ற நிலவரத்தை தவிர்ப்பதற்கு எவ்வாறான வழிவகைகளை கையாளலாம் என்பது பற்றி ஐ.நா. இராஜதந்திரியுடன் கலந்துரையாடப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது;
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) என்னை சந்தித்து, தற்பொழுது நாட்டில் உக்கிரமடைந்துள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் எனது கருத்துகளை கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன் ஈராக், சிரியா, எதியோப்பியா, புரூண்டி ஆகியன உட்பட 10க்கு மேற்பட்ட நாடுகளில் பணிபுரிந்துள்ள பின்னணியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு சுமூகமான தீர்வைக்காண்பதற்கு சர்வதேச சமூகம் ஏற்பாட்டாளர்களாக செயற்பட்டு எத்தகைய பங்களிப்பை வழங்கமுடியும் என்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. இதன்போது, ஐ.நா. நல்லிணக்கத்தும் அபிவிருத்திக்குமான ஆலோசகர் கிட்டா சப்ஹர்வால் உடனிருந்தார்.
சந்திப்பின் பின்னர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கருத்து தெரிவிக்கும்போது கூறியதாவது;
நாட்டில் சட்டமும் ஒழுங்கும் இன்னும் முழுவதுமாக சீர்கெட்டுவிடவில்லை. மேலும் தாமதிக்காமல் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு தற்போதுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணப்படாவிட்டால் நிலைமை மோசமடையலாம்.
ஒருசாரார் குற்றம்சாட்டுவது போன்று சபாநாயகர் பாரபரட்சமாக நடந்துகொள்ளவில்லை. தனக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே முயற்சித்தார். அவருக்கெதிராக யாராவது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவதானால் அதற்குமுன்னர் அத்தகையவர்கள் பாராளுமன்றத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபித்துக்காட்ட வேண்டும்.
தேர்தலொன்றுக்கு செல்வதானால் பாராளுமன்றம், அரசியலமைப்புக்கு அமைவாக சட்டரீதியாக கலைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெறவில்லை. உயர் நீதிமன்றம் எங்களது நிலைப்பாட்டை மதித்து, பாராளுமன்றம் முறைகேடாக கலைக்கப்பட்டதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருக்கிறது.
ஜனாதிபதியின் வேண்டுகோளையேற்று இன்று (ஞாற்றுக்கிழமை) மாலை அவரை சந்திக்க இணக்கம் தெரிவித்திருந்தோம். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சம்பிரதாயபூர்வமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பின்னர், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சுமூகமாக தீர்ப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டேன்.
பிரச்சினையை நீடிக்கவிடாது ஜனாதிபதியும் முக்கிய அரசியல் தலைவர்களும் அரசியலமைப்பின் அடிப்படையில் தற்போது தலைதூக்கியுள்ள பிரச்சினைக்கு பாராளுமன்ற பெரும்பான்மையை அனுசரித்து உரிய தீர்வைக் காணவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *