போர்க்குற்றவாளிகளை சிறைக்குள் தள்ளுங்கள்! – அரசுக்குப் பொன்சேகா அறிவுரை

* சரணடைந்தோர் மீது இராணுவத்தினர் போர்க்குற்றம் புரிந்தனர்
* வெள்ளைக்கொடி விவகாரம் மிகப்பெரிய போர்க்குற்றம்
* போர்க்குற்ற விசாரணையில் என்னிடமுள்ள ஆதாரங்களை வழங்குவேன்
* வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்கமாட்டோம் என்று சொல்லவேண்டாம்
* இணை அனுசரணை வழங்கிவிட்டு முட்டி மோதக் கூடாது

“இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் வர வர மோசமாகவுள்ளது. போர்க்குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கி அவர்களை உடன் சிறையில் அடைக்கவேண்டும் அரசு. அப்போதுதான் ஐ.நாவின் பிடியிலிருந்து இலங்கை தப்பித்துக்கொள்ளலாம்.”

– இவ்வாறு இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா.

வெளிநாட்டு செய்திச் சேவையொன்றின் கொழும்பு செய்தியாளருக்கு வழங்கிய செவ்வியிலேயே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போரின் இறுதியின் போதும் அதன் பின்னரும் சில இராணுவ அதிகாரிகள் தமிழ் மக்கள் மீதும், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகள் மீதும் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர். இதற்கான சாட்சியங்கள் என்னிடம் இருக்கின்றன. அதேவேளை, பாதிக்கப்பட்ட தமிழர்களும் சாட்சிகளாக உள்ளனர்.

வெள்ளைக்கொடிச் சம்பவம் மிகப் பெரிய போர்க்குற்றமாகும். இதனுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மற்றும் அப்போதைய ஆட்சியில் இருந்த முக்கியமானவர்களின் குரல் பதிவுகளும், குற்றம் இழைக்கப்பட்ட காணொலிகளும் என்னிடம் இருக்கின்றன.

சாட்சியங்களை விசாரித்து இராணுவ அதிகாரிகளையும், அப்போதைய ஆட்சியில் இருந்து போர்க்குற்றங்களுக்குத் துணைபோன முக்கியமானவர்களையும் உடன் சிறைக்குள் தள்ளவேண்டும் அரசு.

சில இராணுவ அதிகாரிகளின் சட்டவிரோதமான – படுகேவலமான நடவடிக்கைகளினால் நாட்டின் முழு இராணுவத்துக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது. குற்றம் இழைத்த இராணுவ அதிகாரிகளுக்குத் தாமதமின்றி தண்டனையை வழங்க வேண்டும் அரசு.

ஐ.நா. தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிவிட்டு ஐ.நாவுடனும் சர்வதேச சமூகத்துடனும் முட்டி மோதினால் இலங்கைக்குத்தான் பாதிப்பு.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை ஏற்கமாட்டோம் என்று இலங்கை அரசு தொடர்ந்து மார்தட்டிக்கொண்டிருக்காமல் போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு உடன் தண்டனையை வழங்க வேண்டும்.

அதேவேளை, போர்க்குற்றம் தொடர்பில் எந்த விசாரணைக்கும் நான் தயாராக உள்ளேன் என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். விசாரணைகளின்போது என் வசமிருக்கும் சாட்சியங்களை வழங்க நான் தயங்கமாட்டேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *