பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கும் முடிவில் மாற்றம் இல்லை! – மஹிந்த அணிக்கு வெளிவிவகார அமைச்சு பதிலடி

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்குவதில் எந்த மாற்றமும் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை அரசின் நிலைப்பாடு பற்றிய அறிக்கயை இன்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகம, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, பிரதி சொலிசிற்றர் ஜெனரல் ஏ.நொரின் புள்ளே ஆகியோர் ஜெனி வா அமர்வில் இலங்கையின் சார்பில் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரவுள்ள புதிய பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ள நாடுகளின் தூதுவர்களுடன், ஜனாதிபதி முக்கிய கலந்துரையாடலை மேற்கொள்ள வேண்டும் என்றும், இணை அனுசரணை வழங்கும் விடயத்தில் இருந்து முழுமையாக விலகிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி, பொது எதிரணியின் தலைவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

இதையடுத்தே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் பிரிட்டன் தலைமையில் கொண்டுவரவுள்ள புதிய பிரேரணைக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கும் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *