ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுமீது இன்று விவாதம்! தோற்கடிக்க வியூகம்!! – முறியடிக்க மஹிந்த அணி களத்தில்!!
2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தின் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தான குழுநிலை விவாதம் இன்று சபையில் ( 13) ஆரம்பமாகவுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல், வாய்மூலவிடைக்கான கேள்விச்சுற்று ஆகியன முடிவடைந்த பின்னர் 10.30 மணியளவில் குழுநிலை விவாதம் ஆரம்பமாகும்.
ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடுகள், பிரதமருக்கான ஒதுக்கீடுகள் உட்பட 25 விடயதானங்கள்மீது குழுநிலை விவாதம் நடைபெறவுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதிக்குரிய நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலர் கடந்த சில நாட்களாகவே வியூகம் வகுத்துவந்தனர். சுமார் 30 எம்.பிக்கள் எதிராக வாக்களிப்பார்கள் என்று முஜிபூர் ரஹ்மான் எம்.பி. அறிவித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பதற்கு இடமளியோம் என மஹிந்த அணி சூளுரைத்துள்ளது. ஐ.தே.க. எம்.பிக்கள் வாக்கெடுப்பைகோரும் பட்சத்தில், ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது.
அதேவேளை, ஐ.தே.கவின் பின்னிலை எம்.பிக்களின் அரசியல் தீர்மானம் இறுதிநேரத்தில்கூட மாறலாம் என சிறிகொத்த வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர், ஐ.தே.கவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ள நிலையில், அதற்கு நன்றிகடனாக தமது முடிவிலிருந்து ஐ.தே.க. எம்.பிக்கள் பின்வாங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மஹிந்த அணி , ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிப்பதால், நிதி ஒதுக்கீடு எப்படியும் நிறைவேறும். எனவே, குறைந்தபட்ச எதிர்ப்பு நடவடிக்கையாக வாக்கெடுப்பின்போது சபையில் பிரசன்னமாகாதிருப்பது குறித்து பின்னிலை எம்.பிக்கள் தற்போது கலந்துரையாடிவருகின்றனர்.
