புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் 11 பேர் படுகொலை!

சித்திரைப் புத்தாண்டுக் காலப்பகுதியான கடந்த 78 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் 11 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இன்று செவ்வாய்க்கிழமை இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞர் நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, குறுக்கு வீதியொன்றில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பின்னால் இருந்த நபர் இளைஞரின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.

படுகாயங்களுக்குள்ளான இளைஞர் திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகாமையிலுள்ள ஓட்டோ தரிப்பிடத்துக்குச் சென்ற காட்சிகள் சி.சி.ரி.வியில் பதிவாகியுள்ளன. எனினும், அவரைக் காப்பாற்ற அங்கு நின்ற ஓட்டோ சாரதியோ அல்லது வீதியால் சென்றவர்களோ முன்வரவில்லை.

இதையடுத்து கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதிக்கு குறித்த இளைஞர் செல்ல முயன்றபோது, அவ்விடத்திலேயே கீழே வீழ்ந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த இளைஞர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்திருந்தார்.

21 வயதான தங்கத்துரை தனுஷன் என்ற இளைஞரே இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் தொடர்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கொலை இடம்பெற்றிருக்கின்றது.

இளைஞரைக் கொலை செய்த நபர், தனது தந்தையுடன் திருகோணமலை துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இதேவேளை, கொலன்ன – உல்ஹதுவாவ, கஸ்தானகஹவத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை பொல்லால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சியொன்றைப் பார்வையிடுவதற்குத் தயாரான சந்தர்ப்பத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

17 வயதான பவந்த பிரசாத் அபேகோன் சென்ற இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட இளைஞரின் 22 வயது நண்பரும் தாக்குதலில் காயமடைந்த நிலையில் கொலன்ன மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொலையை மேற்கொண்ட நபர்கள் இதுவரையில் அடையாளங்காணப்படவில்லை. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாத்தளை – கலேவெல, தேவஹூவ, எகேஎல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்த தம்பதியினர் நேற்று திங்கட்கிழமை இரவு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட பிரச்சினையொன்று காரணமாக இந்தக் கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

53 வயதான அனுலா சுரவீர மற்றும் 51 வயதான காமினி சுரவீர ஆகிய தம்பதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் – இபலோகம, வேதணிய பிரதேசத்திலுள்ள சூதாட்ட நிலையமொன்றில் இரு தரப்பினருக்கு இடையில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குருநாகலைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 62 வயதான ஆர்.டி.பிரேமசிறி என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

இபலோகமவில் உள்ள தனது மகனின் வீட்டுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களுள் உயிரிழந்த நபரின் மகனும் அடங்குகின்றார்.

ஹிங்குரக்கொட – நாகபொக்குண, ஜயந்திபுர பிரதேசத்தில் பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு முற்றியதால், குறித்த பெண்ணைத் தாக்கி கணவரே கொலை செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஒரு பிள்ளையின் தாயான 25 வயதான தினுஷா சந்திரசேனவே கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, புத்தாண்டு தினமான நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமையும், புத்தாண்டுக்கு முதல் நாளான சனிக்கிழமையும் வெவ்வேறு இடங்களில் 5 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *